Home » » எனது குடும்பத்தில் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.நான் மட்டுமே உயிரோடு உள்ளேன்

எனது குடும்பத்தில் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.நான் மட்டுமே உயிரோடு உள்ளேன்

சத்துருக்கொண்டானில் படையினர் கூட்டத்துக்கு வருமாறு கூறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படை முகாமுக்குள் அழைத்துச்சென்றவர்கள் தொடர்பில் இதுவரையில் எதுவித தகவலும் இல்லை.இதில் எனது குடும்பத்தினை சேர்ந்த தாய்,தகப்பன் உட்பட பத்து பேர் அடங்குவதாக மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற காணாமல்போனவர்களை கண்டறிவதான ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்த ஒருவர் தெரிவித்தார்.
1990-09-09அன்று தனது தாய்,தகப்பன்,தங்கை,சகோதரன்,மூத்த சகோதரி அவர்களது மூன்று குழந்தைகள்,அம்மம்மா,அம்மப்பா ஆகிய பத்து உறுப்பினர்கள் படையினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சத்துருக்கொண்டான் படைமுகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக குறித்த குடும்பத்தில் மிஞ்சியிருக்கும் வைரமுத்து குழந்தைவேல் என்பவர் சாட்சியமளித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் விசாரணைகளின் இறுதி நாள் விசாரணகள் சனிக்கிழமை மண்முனை வடக்கு – மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்த அமர்வில், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பராணகம, ஆணையாளர்களான திருமதி மனோ ராமநாதன், திருமதி சுரஞ்சனா வித்தியரத்ன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர்.  அத்துடன், சட்ட அதிகாரிகளான சமிந்த அத்கோரல, துசித் முதலிகே ஆகியோரும் முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.
இதன்போது சாட்சியமளிக்கும் மேலும் தெரிவித்த வைரமுத்து குழந்தைவேல் என்பவர்,
இன்று எனது குடும்பத்தில் நான் மட்டுமே உயிரோடு உள்ளேன்.எங்கள் குடும்பத்தில் இருந்த அனைவரும் காணாமல்போயுள்ளனர். காணாமல்போனவர்களில் எனது அக்காவின் குழந்தைகளான 06,04,02 வயது குழந்தைகளும் அடங்கியுள்ளனர்.வீட்டுக்கு இராணுவம் வந்து எமது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டுசெல்லும்போது நான் பற்றைக்காட்டுக்குள் மறைந்திருந்தேன்.அதன் காரணமாகவே நான் உயிர்தப்பினேன்.
அன்று இரவு சத்துருக்கொண்டான் படைமுகாமுக்குள் பெரும் கூக்குரலும் அழுகை சத்தங்களும் வெடிச்சத்தங்களும் கேட்டதுடன் சிறிது நேரத்தில் டயர் போட்டு எரிக்கப்பட்டு பெரும் தீப்பிழம்பும் தோண்றியது.
அந்தவேளையில் குறித்த படைமுகாமின் பொறுப்பதிகாரியாக கப்டன் காமினி வர்ணகுலசூரியவும்,கேணல் சேஸ பெர்னாண்டோவும் கடமையாற்றிவந்தனர்.நாங்கள் மறுதினம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கவனத்துக்கு மறுதினம் கொண்டுவந்தபோதிலும் அவர்கள் படை முகாமுக்கு சென்று விசாரித்தபோது தாங்கள் யாரையும் கொண்டுவரவில்லையென்று தெரிவித்துள்ளனர்.அந்த சம்பவத்தில் சத்துருக்கொண்டான்,பனிச்சையடி,கொக்குவில்,பிள்ளையாரடி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த மொத்தமாக 185பேர் ஒரு நாள் கொண்டுசெல்லப்பட்டு காணாமல்போனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு,சிவில் பாதுகாப்பு குழு ஆகியவற்றில் 1996ஆண்டு முறையிட்டேன் எதுவித பயனும் இல்லை.இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கூட்டம் ஒன்றில் சம்பவம் நடைபெற்றபோது சத்துருக்கொண்டான் படைமுகாமின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய கப்டன் காமினி வர்ணகுலசூரிய கலந்துகொண்டிருந்தார்.அவரிடம் எமது உறவுகள் குறித்து வினவியபோது அவர்கள் காற்றில் கலந்துவிட்டதாக பதிலளித்தார்.எமது உறவுகள் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட்டு ஒரு நல்லமுடிவினை வழங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் அகதிகளாக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது காணாமல்போனவர்கள் தொடர்பிலும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற காணாமல்போனவர்களை கண்டறிவதான ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன.
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைகழகத்தில் வைத்து 1990ம் ஆண்டு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட 158 பேர் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பாலகிட்ணன் ஆணைக்குழுவின் முடிவுகளோ அல்லது அது குறித்த எதுவித முன்னேற்றங்களும் கடந்த 20வருடங்களாக ஏற்படாத நிலையில்
இன்றைய ஜனாதிபதி ஆணைக்குழு எதனை சாதிக்கப்போகின்றது என மட்டக்களப்பின் சமாதான குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைகழகத்தில் வைத்து 1990ம் ஆண்டு எமது கண்ணுக்கு முன்னால் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட 158 பேர் குறித்து விசாரணை செய்வதற்காக 1996ம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களினால் அமைக்கப்பட்ட பாலகிட்ணன் ஆணைக்குழுவில் நாங்கள் சகல விடயங்களையும் தெரிவித்திருந்தோம் ஆனால் 20வருடங்களாகியும் கிழக்குப் பல்கலைகழகத்தில் வைத்து கொண்டு செல்லப்பட்ட 158 பேர் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை இன்நிலையில் இன்று அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் நாம் எவ்வாறு நம்பிக்கை வைக்கமுடியும்?
எனவே எமது சமாதான குழுவினர் மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கிழக்குப் பல்கலைகழகத்தில் வைத்து கொண்டு செல்லப்பட்ட 158 பேர் குறித்து ஏற்கனவே 1996ம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களினால் அமைக்கப்பட்ட பாலகிட்ணன் ஆணைக்குழுவிடம் சகல தரவுகளையும் சமர்ப்பித்து விட்டதாகவும் இந்த ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு புதிதாக எதுவும் இல்லை என கூறியதுடன் இன்னும் சில வருடங்களில் மேற்படி சம்பவம் குறித்த சாட்சிகள் வயோதிபர்களாக உள்ளபடியால் இறந்துவிடுவார்கள் என்றும் அதன் பின்னர் மேற்படி சம்பவங்கள் அனைத்தும் ஆவணங்களாக மட்டுமே இருக்கும் என்பதால் மேற்படி 158 பேரினது உறவுகளது சாட்சியங்கள் அழிவதற்கு முன்னர் விசாரணைகளை நிறைவுசெய்து அவர்களுக்கான பதிலை வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக மனிதர்களின் இறப்பு தவிர்க்கமுடியாதது என்றாலும் மேற்படி 158 பேரும் இறந்தார்களா? இல்லையா? என்பதை இது போன்ற ஆணைக்குழுக்கள் தெளிவுபடுத்தினால் தான் மேற்படி காணாமல் போனவர்களின் உறவுகள் அவர்களுக்கான சமய, சம்பிரதாய சடங்குகளை செய்வதற்கும் அவர்களது இறப்பு குறித்த ஏனைய விடயங்களை செய்துகொள்வதற்கும் உதவியாக இருக்கும்.
ஆனால் கடந்த 23வருடங்களாக தங்களது உறவுகள் இருக்கின்றார்களா? இல்லையா எனத்தெரியாமல் அல்லல்பட்டுக்கொண்டு இருக்கும் இவர்களது உறவுகள் எங்களது சமாதான குழுவிடம் தங்களது காணாமல் போன உறவுகள் குறித்து தொடர்ந்தும் வினா எழுப்பிக்கொண்டே இருக்கின்றார்கள்.
எனவே இவர்கள் குறித்து குறுகிய காலத்திற்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமான தகவல்களை இந்த ஜனாதிபதி ஆணைக்குழு பெற்றுத்தருமாக இருந்தால் மாத்திரமே இந்த ஆணைக்குழு குறித்து நாம் நம்பிக்கை அடையமுடியும் என கிழக்கு பல்கலைகழத்தில் வைத்து கொண்டு செல்லப்பட்ட 158 பேர் குறித்த விசாரணைகளில் கலந்துகொண்ட மட்டக்களப்பின் சமாதான குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |