கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சல் நிலங்களில் தமிழர்களுக்கு சொந்தமான கால் நடைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை காணப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தெரிவித்திருக்கின்றார். இம்மாகாணத்தில் தற்போது பருவகால வேளாண்மைச் செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில், கால் நடைகள் கால்நடை பண்ணையாளர்களினால் மேய்ச்சல் தரைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் எல்லைகளிலுள்ள மேய்ச்சல் தரைகளின் ஒரு பகுதியில் பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்கள் தற்போது பயிர்ச் செய்கைகளில், ஈடுபடுவதால் கால்நடைப் பண்ணையாளர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது.
|
மேய்ச்சல் தரைக் காணிகளில் அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுவது தொடர்பாக தங்களால் வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும் இந்தப் பிரச்சினை தீர்வு காணப்படாத பிரச்சினையாக தொடர்வதாக கால்நடை பண்ணையாளர்கள் கவலையுடன் கூறுகின்றார்கள். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களிலுள்ள கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளில் கடந்த இருவார காலத்திற்குள் 10ற்கும் மேற்பட்ட கால்நடைகள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டும் காயமடைந்துமுள்ளமை, 30ற்கும் மேற்பட்ட கால்நடைகள் காணாமல் போயுள்ளமை தொடர்பாக முறைப்பாடுகள் வந்துள்ளதாக துரைரத்தினம் கூறியுள்ளார்.
பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள், கால்நடைகளைப் பிடித்து வைத்து தமது பயிர்களை சேதப்படுத்தியதாகக் கூறி பண்ணையாளர்களிடம் ருபா 10 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரை இழப்பீடு எனக் கூறி கப்பம் பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பட்டிப்பளை பிரதேசத்தில் காணாமல்போயுள்ள கால்நடைகளை தேடிச்சென்ற இருவர் இந்த வாரத்தில் யானையின் தாக்குதலில் மரணமடைந்துள்ள சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். இந்நிலை தொடருமானால் கால்நடை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரைகளிலிருந்து கால்நடைகளை அழைத்து வரவேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் இதனால் விவசாயிகளுக்கும் கால்நடை பண்ணையாளர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் உருவாகக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரிடமிருந்து தனக்கு கிடைத்துள்ள இந்தப் புகாரை தான் எழுத்து மூலம் கேட்டுள்ளதாக அரசாங்க அதிபர் பி. எம் . எஸ் சார்ள்ஸ் கூறியுள்ளார்.இருப்பினும் அந்த பிரதேசத்திற்கான பிரதேச செயலாளர்களிடமிருந்து இது தொடர்பான அறிக்கைகளை தான் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
|
0 Comments