பற்றையினுள் மாபிள் தேடிய சிறுவனின் கையில் பாம்பு தீண்டிய நிலையில் அந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூநகரில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பூநகரைச் சேர்ந்த அன்பழகன் கதீஸ் (வயது 8) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். பூநகர் திருவள்ளுவர் வித்தியாலத்தில் மூன்றாம் தரத்தில் இந்தச் சிறுவன் கல்வி கற்று வருகின்றான்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்தச் சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாபிள் விளையாடிக்கொண்டிருந்தான். இதன்போது மாபிள் ஒன்று அருகிலிருந்த பற்றையினுள் போய் விழுந்துள்ளது.
இவ்வாறு பற்றையினுள் போய் விழுந்த மாபிளை சிறுவன் தேடியபோது, அந்தப் பற்றையிலிருந்த பாம்பு சிறுவனின் கையில் தீண்டியுள்ளது. இருப்பினும் பாம்பு தீண்டியதை கவனத்தில் கொள்ளாத இந்தச் சிறுவன், விளையாடி முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தபோது மயங்கி விழுந்துள்ளான்;.
உடனடியாக இந்தச் சிறுவனை பெற்றோர் அலிஒலுவ வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றபோது, இந்தச் சிறுவன் வழியில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
0 Comments