முப்பது வருடங்களாக நடைபெற்ற யுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்றபோது எமக்கு கைகொடுத்ததும் எம்மை இன்று வாழ வைத்துக் கொண்டு இருப்பதும் கல்விச் சொத்தைத்தவிர வேறொன்றும் இல்லை என கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கிட்ணன் கோவிந்தராஜா தெரிவித்தார்.
இம்முறை வெளியான தரம் ஐந்து புலமைப்பரீசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று சாதனை படைத்த 40 மாணவர்களையும், அவர்களை கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை கார்மேல் பற்றிமாகல்லூரி தேசிய பாடசாலை கிளனி மண்டபத்தில் கல்லூரி முதல்வர் அருட் சகோதரர் எம்.ஸ்ரீபன் மத்தியு தலைமையில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கிட்ணன் கோவிந்தராஜா, கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் யு.எல்.எம். மொகமட் காசிம் மற்றும் கல்முனை தமிழ்ப் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் பி.ஜெகநாதன் உவெஸ்லி உயர்தரப் பாடசாலை அதிபர் வி.பிரபாகரன், பாடசாலைச் சமூகம், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய உபவேந்தர்,
இன்று இங்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் விழா வெற்றிபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழா என்பதனை விட வெற்றி பெற்றவர்களை ஊக்குவிக்கும் விழாவாகவும் வெற்றி பெறாதவர்களை ஊக்குவிக்க தூண்டும் விழாவாகவும் அமைந்திருப்பது மிகவும் பெருத்தமானதொன்றாக அமையும்.
தரம் ஐந்து புலமைப்பரீசில் பரீட்சையானது ஒரு அளவுகோல் பரீட்சையும் அல்ல வாழ்க்கையை தீர்மானிக்கும் பரீட்சையும் அல்ல. மாறாக பெற்றோர்களின் கௌரவத்திற்காக வேண்டி உருவாக்கப்பட்ட பரீட்சையாக மாறிவிட்டது. அத்தோடு சித்தியடையாத மாணவர்கள் கல்வியறிவு குறைந்தவர்கள் என்றும் அர்த்தமில்லை அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
மூன்று மணித்தியாலப் பரீட்சை வினாத்தளின் மூலம் மாணவர்களினது முழுமையான அறிவாற்றல் திறனை மதிப்பிட முடியாது. தரம் ஐந்து புலமைப்பரீசில் பரீட்சை சம்பந்தமாக அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்களும் இப்பரீட்சையானது, தேவையில்லை என்கின்ற ஒருமித்த கருத்து உண்டு ஆனால் இதில் இரண்டு வகையான நன்மைகளை முன்வைத்தே இப்பரீட்சை ஆரம்பிக்கப்பட்டது.
வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவிப் பணம் பெறுவதற்காகவும். வசதியான பாடசாலைகளை தெரிவு செய்வதற்காகவும் வேண்டியே இப்பரீட்சை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது காலப்போக்கில் மாற்றமடைந்து பெற்றோர்களின் கௌரவத்திற்குரிய பரீட்சையாக மாறிக்கொண்டு செல்வதனை அவதானிக்க முடிகின்றது.
தங்களது குழந்தைகள் சிறுவர்கள் என்பதனை மறந்து செயற்படுவது அவர்களினது சுதந்திரத்தினை பாதிக்கும் செயற்பாடாகவே அமைந்து விடுகின்றது.
கல்விப்பொது சாதாரணதரம், உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் மாணவர்களின் மேல் பெற்றோர்கள் அதீத கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். காரணம் அவர்களினது வாழ்க்கையை தீர்மானிக்கும் பரீட்சையாகவே இப்பரீட்சைகள் பார்க்கப்படுகின்றது.
10 வீத மாணவர்களின் நன்மை கருதி வெளியிட்ட பரீட்சை பெறுபேறுகள் 90 வீதமான மாணவர்களையும் பெற்றோர்களையும் பாதிக்கச் செய்து விட்டது. இதுசம்பந்தமாக அனைத்து உபவேந்தர்களும் தெரியப்படுத்தி இருக்கின்றோம்.
இனிமேல் சிறுவர் தினத்தன்று பரீட்சை முடிவினை வெளியிடக்கூடாது எனவும் தெரிவித்திருக்கின்றோம் எனவும் கூறினார்.
0 comments: