மக்களை அறவழிப்போதனை செய்து அகிம்சை வழிப்படுத்த வேண்டிய பௌத்த பிக்கு செய்யும் அடாவடித்தனத்துக்கு எதிராக மக்கள் களர்ந்தெழுந்தால் அவரால் தாங்க முடியாது போகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) என தெரிவித்துள்ளார்.
பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் பிரதேச செயலாளரைத் தாக்க முனைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மாலை வெளியிட்டுள்ள அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புதன்கிழமையான மக்கள் சந்திப்பு நாளில் பிரதேச செயலாளரது அலுவலகத்தினுள் சென்ற மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியான அம்பிட்டியே சுமணரத்ன தேரர் பிரதேச செயலாளரான பெண் நிருவாக சேவை அதிகாரியை தகாத வார்த்தைகளால் பேசியது மட்டுமல்லாமல் அரச சொத்துக்களையும் சேதப்படுத்தியிருக்கிறார்.
குறித்த பௌத்த பிக்குவின் அடாவடித்தனமானது இதுமுதல் தடவையல்ல, இன்னும் பல இடங்களில் இவ்வாறு இவர் நடந்து கொண்டிருக்கிறார். இப்போது இவர் அரச அலுவலகத்திளுள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இவர் இவ்வாறு நடந்து கொள்வதற்கு அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பினரும் உடந்தையாக இருக்கிறாள்களா என்ற கேள்வி எழுகிறது. இதன் பின்னணி என்ன என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.
சாந்தமான தன்மையுடைய கௌதம புத்தரின் போதனைகளை போதிப்பதனை விடுத்து தெருவழிச் சண்டியர்போல் செயற்படுகிறார். ஆனால், மக்களை நல்வழிப்படுத்தி அறவழிப்போதனை செய்து அகிம்சை வழிப்படுத்த வேண்டிய இந்த பௌத்த பிக்கு செய்யும் அடாவடித்தனத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் அவரால் தாங்க முடியாது போகும்.
மிகவும் சாந்தமான சுபாவம் கொண்ட பெண் பிரதேச செயலாளரான பட்டிப்பளை பிரதேச செயலாளர் தன்னைத் தாக்க முற்பட்டதாக பௌத்த பிக்கு கூறியிருப்பதானது அபாண்டமானதொரு குற்றச்சாட்டாகும்.
ஒரு அரச அதிகாரி தன்னுடைய கடமையைச் செய்வதற்கு இடைஞ்சலாக இருந்தது மட்டுமல்லாமல் வீண்பழியையும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியான அம்பிட்டியே சுமணரத்ன தேரர் சுமந்தியமையானது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
0 Comments