Home » » மட்டக்களப்பு பட்டிப்பளையில் பதட்டம்

மட்டக்களப்பு பட்டிப்பளையில் பதட்டம்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளரை அச்சுறுத்திய மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மீண்டும் பட்டிப்பளை – பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தமையால் இப்பிரதேசத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும், பதட்டம் ஏற்பட்டது.

பொலிஸ் நிலையத்திற்கு வந்த சுமணரத்ன தேரரை மீண்டும் செல்ல விடாது தடுக்கும் வகையில் பொது மக்கள் வீதியை மறித்து ரயர்கள் எரித்து தமது எதிர்ப்பைக் காண்பித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் தமது வாகனத்தில் ஏற்றி கடும்பாதுகாப்புடன் மண்முனை வரை கொண்டு சென்று பாதுகாப்பாக வழியனுப்பி வைத்துள்ளதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு - மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளரினை அச்சுறுத்திய பௌத்த மதகுருவான அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மீண்டும் பிரதேச செயலக வீதியில் நடமாடியதனால் இப்பிரதேசத்தில் பதட்ட நிலைஏற்பட்டது.

பொலிஸ் நிலையத்திற்கு வந்த தேரரைத் தாக்கும் வகையிலும் அவரது நவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பிரதேச பொதுமக்கள் ஒன்று கூடி எதிர்ப்புக் காட்டியதுடன், வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு வந்த சுமணரத்ன தேரர் மட்டக்களப்புக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதே நேரம், இன்றைய தினம், பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் மந்த கதியில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை பகல் மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் புகுந்த மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிரதேச செயலாளரின் அலுவலக சாதனங்களைச் சேதப்படுத்தியிருந்ததுடன், பிரதேச செயலாளரையும்
அச்சுறுத்த்தியிருந்ததாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


அதனையடுத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் நேற்றைய தினம் பொது மக்களும் பிரதேச செயலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதே நேரம் தேரர் பட்டிப்பளை- கொக்கட்டிச்சோலை பொலிஸார் ஊடாக களுவாஞ்சிக்குடி நீதிமன்றுக்கு  கொண்டுவரப்பட்டு நேற்றைய தினம் 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணையும் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |