நைஜீரிய சிறைகளில் நூற்றுக்கணக்கான கைதிகள் மரணம்…!!
நைஜீரியாவின் வடக்குப்பகுதியில் போகோஹராம் என்ற போராளிகள் குழு முஸ்லிம் சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றது. இந்த சண்டையில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இப்போராளிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின் போது பிடிபட்டவர்கள் அங்குள்ள பல்வேறு போதிய வசதியில்லாத சிறைச்சாலைகளில் அதிகமான அளவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள்வர்கள் சரியான உணவுப் பராமரிப்பு இன்றியும், காற்றோட்ட வசதியில்லாமல் மூச்சுத்திணறியும், தூக்கிலிடப்பட்டும் கடந்த அரையாண்டில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் மரணம் அடைந்து இருப்பதாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை, அரசுக்கு எதிராக குற்றம் சாட்டியுள்ளது.
இது முஸ்லிம் போராளிகளை ஒடுக்கும் ஒரு நடவடிக்கைகளில் ஒன்று என்றும் அது கூறியுள்ளது. இதனால் இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தவும் அச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்களை மீட்டுள்ளோமே தவிர, எந்த குடிமகனின் உயிரையும் நாங்கள் எடுத்து இருக்கவில்லை என்று நைஜீரியா உள்துறை அமைச்சர் அப்பா மோரா மறுத்துள்ளார்.
ராணுவ நடவடிக்கையின் போதுதான் கடந்த அரையாண்டில் மட்டும் 950 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் போகோ ஹராம் போராளிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று நைஜீரிய ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
இந்த மாத தொடக்கத்தில் மாணவர் விடுதிக்குள் புகுந்த தீவிரவாதிகள் 50 மாணவர்களை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலை போகோஹராம் தீவிரவாதிகள் நடத்தியதாக அரசு கூறியுள்ளது.
0 Comments