இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என பிரித்தானியாவின் பொதுச்சபை வெளியுறவுக் குழு , பிரதமர் டேவிட் கமரூனிடம் கோரிக்கை விடுத்துள்ளது . பொதுநலவாயத்தின் கொள்கையும் எதிர்காலமும் என்ற தலைப்பில் பிரித்தானியாவின் பொதுச்சபை வெளியுறவுக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . அந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது .
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன . இந்தநிலையில் 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடாத்தப்படுகின்றமை பிழையான விடயம். எனினும் இவ்வாறு பிரித்தானிய பிரதமர் மாநாட்டில் பங்கேற்க எடுத்த தீர்மானம் குறித்து பகிரங்கமான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.
2011 ஆம் ஆண்டு பேர்த்தில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் பின்னர் , பொதுநலவாய நாடுகளின் ஆலோசனை சபை , மனித உரிமை மீறல்கள் , போர்க்குற்றங்களை காரணம் காட்டி , இலங்கையில் 2013 ம் ஆண்டு மாநாட்டை நடத்துவது குறித்து எச்சரிக்கையை விடுத்திருந்தது .
இதேவேளை , டேவிட் கமரூன் மாநாட்டில் கலந்து கொள்வது உறுதியென பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது . அத்துடன் மாநாட்டுக்காக வருகை தரும் கமரூன் வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட முக்கிய இடங்களுக்கும் பணயம் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments