எசரிக்கியா கோலை எனும் பக்டீரியாவின் வளர்சிதைமாற்ற கொழுப்பமிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் மூலம் பக்டீரியா வளர்ந்த ஒரு லீற்றர் வளர்ச்சியூடகக் குழம்பில் இருந்து 580 மில்லிகிராம் பெட்ரோலை உருவாக்கியுள்ளனர்.
பல தசாப்தங்களாக நாங்கள் நாளாந்தப் பயன்பாட்டில் அத்தியாவசியமாக உள்ள பெட்ரோல், டீசல், மற்றும் பல தொழிற்துறை மற்றும் நுகர்வு வேதியற்பொருட்கள் ஆகிய திரவ எரிபொருட்களை உருவாக்க தொல்படிம மூலங்களில் தங்கியுள்ளோம். எனினும் பெருகிவரும் இயற்கை வளங்களின் பற்றாக்குறை, புவி வெப்பமயமாதல் போன்ற சுற்றுச்சூழல் இடர்நிலைகளால் பெட்ரோலியப் பொருட்களை வேறு ஒரு வலுவான முறையில் உற்பத்தி செய்யும் முறை பற்றிய அறிவு, பல அறிவியலாளர்களின் சிந்தனைக்கு சவாலைக் கொடுத்துவருகின்றது.
பரவிய அளவில் வாகன எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் பெட்ரோலிய மூலத்தில் இருந்து தருவிக்கப்படும் பெட்ரோல் (கல்லெண்ணை) ஐதரோகாபன்களும் (நீரகக்கரிமம்) வேறு பல சேர்மங்களும் கொண்டதொரு கலவையாகும். நிறைவுற்ற ஐதரோ கார்பன்கள், அல்கேன்கள் என அழைக்கப்படுகின்றன. இவை கரிம (காபன்) அணுக்களையும் ஐதரசன் அணுக்களையும் மட்டுமே கொண்டுள்ளன. நேர்ச்சங்கிலி மற்றும் கிளைச்சங்கிலித் தொடர் அமைப்பில் கல்லெண்ணையில் அல்கேன்கள் உள்ளன. இவற்றின் ஒவ்வொரு சங்கிலித் தொடரும் 4-12 வரையிலான கரிம அணுக்களை கரிம-கரிமம் நேரடிப் பிணைப்பு மூலம் கொண்டுள்ளன.
பக்டீரியாவை மூலமாகக் கொண்டு எரிபொருளை உற்பத்தி செய்யும் ஆராய்வு ஏற்கனவே ஐக்கிய இராச்சியத்திலும் ஐக்கிய அமெரிக்காவிலும் (2010) நிகழ்ந்துள்ளது. கரும்பு வெல்லத்தை பக்டீரியா ஊடகத்தில் டீசலாக மாற்றும் செயன்முறை ஆராயப்பட்டது.
வளர்சிதைமாற்றப் பொறிமுறை மூலம் எசரிக்கியா கோலை (ஈ-கோலை, Escherichia coli) எனும் பக்டீரியாவைப் பயன்படுத்தி முன்னர் நிகழ்ந்த ஆய்வில் 13-17 கரிம அணுக்களைக் கொண்ட நீள்சங்கிலி அல்கேன் பெறப்பட்டது – இது டீசலை ஈடு செய்வதற்கு உகந்ததாகும். ஆனால், இதுவரையில் குறுகியசங்கிலி அமைப்பு அல்கேன் நுண்ணுயிரிகளில் இருந்து பெறப்பட்டதற்கான தகவல்கள் இருக்கவில்லை. குறுகிய சங்கிலித்தொடர் அல்கேன் பெட்ரோலை ஈடு செய்யலாம்.
ஐக்கிய இராச்சியத்தில் நிகழ்ந்த ஆய்வில் குளுக்கோசு போன்ற வெல்லப் பதார்த்தத்தை மரபணு மாற்றப்பட்ட பக்டீரிய ஊடகத்தில் கொழுப்பமிலங்களாக மாற்றி பின்னர் அதிலிருந்து ஐதரோ கார்பன்களை உருவாக்கலாம் எனும் முறையை ஆய்ந்தனர்.
செப்டெம்பர் 29இல் (2013) நேச்சர் சஞ்சிகையில் பெட்ரோலை எசரிக்கியா கோலை வளர்சிதைமாற்றப் பொறிமுறை மூலம் கொரிய நாட்டு ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர் எனும் விவரம் வெளிவந்துள்ளது. (Professor Sang Yup Lee of the Department of Chemical and Biomolecular Engineering at the Korea Advanced Institute of Science and Technology (KAIST))
இயல்பான கொழுப்பமிலத்தின் வளர்சிதைமாற்றத்தில் மாற்றம் செய்யப்பட்டதன் மூலம் குறுகிய சங்கிலித்தொடர் அல்கேன் உருவாக்கத்துக்கான செயற்கை வழி உண்டாக்கப்பட்டது. இதே முறையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அல்ககோலும் மற்றும் தாவர எண்ணெயில் அடங்கியுள்ள கொழுப்பு எசுத்தர்களும் உருவாக்கலாம் என்று கொரிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments