வடக்கை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி

யாழ்ப்பாணத்தில் 213,907 மொத்த வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
முல்லைத்தீவில் 28,226 மொத்த வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், கிளிநொச்சியில் 37,079 மொத்த வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி தம் வசப்படுத்தியுள்ளது.
இதேவேளை வவுனியாவில் 41,225 மொத்த வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், மன்னாரில் 33,118 மொத்த வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) கைப்பற்றியுள்ளது.
இதன்படி தமிழரசுக் கட்சி மொத்தமாக 28 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வடமாகாணத்திற்கான இரண்டு போனஸ் ஆசனங்களும் தமிழரசுக் கட்சிக்கே கிடைக்கப்பெறும்.
எனவே வடமாகாணத்தில் 30 ஆசனங்களைப் கைப்பற்றி தமிழரசுக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
வடமாகாணம் சுமார் 25 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக நேற்று (21) மாகாணசபைத் தேர்தலை எதிர் கொண்டது. வட மாகாணத்தில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 488 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருந்தனர்.
வடமாகாணத் தேர்தல், அபிவிருத்திக்கும் அரசியல் உரிமைக்கும் இடையிலான போட்டியாகவே அனைவராலும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் தமது உரிமையை வென்றெடுப்பதற்கான ஆணையை வடக்கு மக்கள் இட்டுள்ளனர் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 Comments