Home » » மட்டக்களப்பில் 29 ஆயிரம் விதவைகள்! சமூக சீரழிவுகள் அதிகரிப்பு: மட்டு.அரச அதிபர்

மட்டக்களப்பில் 29 ஆயிரம் விதவைகள்! சமூக சீரழிவுகள் அதிகரிப்பு: மட்டு.அரச அதிபர்

மட்டக்களப்பில் 29 ஆயிரம் விதவைகள்! சமூக சீரழிவுகள் அதிகரிப்பு: மட்டு.அரச அதிபர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 ஆயிரம் விதவைகள் உள்ளதாக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விசேட ஒன்று கூடல் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சத்துருக்கொண்டானிலுள்ள சர்வோதய மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 ஆயிரம் விதவைகள் உள்ளனர். அதேபோன்று கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் அதிகளவாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளனர்.
கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் முழுமையான எண்ணிக்கை இன்னும் அறிக்கையிடப்படவில்லை. ஏனெனில் சிலர் திருமணம் செய்ததை இவர்கள் பதிவு செய்யாததால் இந்த விபரம் இன்னும் முழுமையாக தெரிய வரவில்லை.
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டம் அதிகம் மதுபானம் விற்பனை செய்யக் கூடிய மாவட்டமாகவும் உள்ளது.
பெண்களுக்கெதிரான வன்முறை, குடும்ப வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகம், பாடசாலை செல்லாத சிறுவர்கள் என சமூகச் சீரழிவுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் காணப்படுகின்றன.
இவ்வாறான சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலாளர்களின் ஊடாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இது தொடர்பாக மாதாந்தம் பிரதேச செயலாளர்களுடன் கூட்டங்களை நடாத்தி இதை கட்டுப்படுத்துவதற்காக பிரதேச மட்டத்திலுள்ள எமது உத்தியோகத்தர்களை கொண்டு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

நுண் கடன் வழங்கும் நிறுவனங்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுய தொழிலுக்காக நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வழங்கி விட்டு கடனை செலுத்த தாமதிக்கும் பெண்களிடம், அந்த நிறுவன அதிகாரிகள் பாலியல் ரீதியாக கடனைத் திரும்பத் தருமாறு கோருவதாகவும் இந்த நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்படல் வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் கூட்டம் இன்று மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 31 அரச சார்பற்ற நிறவனங்கள் கலந்து கொண்டன.

இக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுய தொழிலுக்காக நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள், கடனை செலுத்த தாமதிக்கும் பெண்களிடம் அந்த நிறுவன அதிகாரிகள் பாலியல் ரீதியாக கடனுக்கு பதிலை தருமாறு கோருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறான இந்த நுண் கடன் வழங்கும் நிறுவனங்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்ற பிரதேசங்கள் உட்பட பல பகுதிகளில் பெண்கள் கடும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்கள் இந்த பகுதியிலுள்ள பெண்களுக்கு சுய தொழிலுக்காக கடன்களை அதிக வீத வட்டிக்கு வழங்கி விட்டு தாமதிக்கும் பட்சத்தில் அந்த பெண்களிடம் பாலியல் ரீதியான பதிலை எதிர் பார்ப்பதாகவும் இதனால் கணவன் மனைவிக்கிடையில் குடும்ப வன்முறை ஏற்பட்டு வருவதாகவும் தற்கொலை இடம் பெறுவதற்கும் இது காரணமாக அமைவதாகவும் இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
உடனடியா இதனை தடுத்து நிறுத்த அனைவரும் முன் வரவேண்டுமென இதன் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தோடு மீள்குடியேற்றப் பிரதேசங்களில் திட்ட மிட்ட குடியேற்றங்கள் இன உறவை பாதிக்கும் என்பதால் இதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
காணிக்குரித்தானவர்கள் இருக்க வேறு நபர்களை குடியேற்ற சில அமைப்புக்கள் நடவடிக்கை எடுப்பதானது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் காணிக்குரியவர்களை அவர்களின் சொந்த காணிகளில் குடியேற்ற அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுவது என இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வலது குறைந்த விசேட தேவையுடையோர் மற்றும் முதியவர்களுக்கு சமுர்த்தி உதவிகளை வழங்க சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மறுப்புத்தெரிவிப்பதால் அவர்களுக்கு சமுர்த்தி உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்டோரை கேட்பது என இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக வி.கமலதாஸ் மேலும் குறிப்பிட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |