கிளிநொச்சில் பாடசாலை வகுப்பறையில் மாணவியொருவரின் குடிநீர்ப் போத்தலில் சிறுநீர் கலந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை அறியாத மாணவி அதனை பருகியுள்ளார்.
கிளிநொச்சி நகரிலுள்ள முன்னணி கலவன் பாடசாலையொன்றில் இந்த அதிர்ச்சி சம்பவம், கடந்த 9ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
தரம் 10 வகுப்பறையில் இந்த சம்பவம் நடந்தது.
மாணவர் தலைவராக செயற்படும் மாணவியொருவர், வகுப்பறையில் மிக கண்டிப்பாக செயற்படுபவர் என பெயர் பெற்றவர்.
அவரது கண்டிப்பினால், மாணவர்கள் சிலர் அதிருப்தியடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாணவிகள் பாடமொன்றுக்காக வகுப்பறைக்கு வெளியில் சென்றுள்ளனர். மாணவர்கள் மாத்திரம் வகுப்பறையில் இருந்தனர்.
மாணவர் தலைவி மீண்டும் வகுப்பறைக்கு திரும்பிய பின்னர், தனது குடிநீர் போத்தலில் இருந்த நீரை பருகியுள்ளார்.
அதன் வித்தியாசமான தன்மை காரணமாக சந்தேகமடைந்து, குடிநீர் போத்தலை ஆசிரியையிடம் கொண்டு சென்றார்.
குடிநீரின் நிறம் மாறியுள்ளதுடன், குடிநீர் அளவும் அதிகரித்திருந்ததாக மாணவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
குடிநீரை விரலால் தொட்டு தனது நாக்கில் வைத்து ஆசிரியை பரிசோதித்தார். அவருக்கும் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பொதுச்சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டது.
பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையில், குடிநீர் போத்தலில் சிறுநீர் கலந்திருந்தது தெரிய வந்தது.
மாணவியின் கண்டிப்பினால், பழிவாங்குவதற்காக மாணவர்களே சிறுநீரை கலந்ததாக கருதப்படுகிறது.
தான் பரிசோதித்தது சிறுநீர் என தெரிந்ததும், ஆசிரியை தொடர்ந்து வாந்தியெடுத்து, தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை நிர்வாகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
0 comments: