கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம நேற்று 02.06.2022 குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பொருட்டு 2 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே 9 தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கஹந்தகம மற்றும் மேலும் இருவர் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இதேவேளை, கஹந்தகம, நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர், கொழும்பில் உள்ள CID தலைமையகத்திற்கு வெளியே, கஹந்தகம ஊடகவியலாளர்களிடம் கூறுகையில்,
தாக்குதல்கள் நடந்த போது கொழும்பு மாநகர சபையில் இருந்தேன் , மே 9 போராட்டக்காரர்களைத் தாக்கியவர்களில் தானும் இருந்ததாகக் கூறுவதை மறுக்கிறேன் . பிற்பகல் 1 மணி முதல் மாநகர சபையில் தான் இருந்ததற்கான ஆதாரங்கள் அடங்கியுள்ள சிசிடிவி காட்சிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்கவுள்ளேன்..
“நான் மதியம் 12 மணிக்கு டெம்பிள் ட்ரீஸிலிருந்து கிளம்பினேன். நான் மதியம் 1 மணிக்கு மாநகர சபையில் இருந்தேன், 2.30 மணிக்கு அந்த இடத்தை விட்டு வெளியேறினேன் என்பதற்கு இந்த சிடியே சான்று. பிற்பகல் 2.30 மணிக்குப் பிறகு நான் கும்பலால் தாக்கப்பட்டேன். ‘கோட்டாகோகம’ மற்றும் ‘மைனாகோகம’ போராட்டத் தளங்கள் தாக்கப்பட்டபோது நான் அங்கு இருக்கவில்லை. மாநகர சபையின் சிசிடிவி காட்சிகளுடன் கூடிய இந்தக் குறுந்தகடை ஆதாரமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சமர்ப்பிக்க உள்ளேன்” என்றார்.
தான் தனது சொந்த விருப்பத்தின் பேரில் சணடைந்ததாக கூறிய கஹந்தகம, தான் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார்.
“நான் தலைமறைவாகவில்லை, உடல் நிலை சரியில்லாமல் இருந்தேன். ஹெல்மெட்டால் தலையில் தாக்கப்பட்டதால் சிகிச்சையில் இருந்தேன். நான் தேசிய மருத்துவமனையில் வைத்து தாக்கப்பட்டேன், அதனால் நான் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டேன். தேசிய வைத்தியசாலை நோயாளி ஒருவரை தாக்கியது மனிதாபிமானமற்ற செயல். போராட்டக்காரர்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதையிட்டு நான் வருத்தமடைகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த பெரேரா மற்றும் மிலன் ஜயதிலக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவர் வசந்த ஹந்தபாங்கொட உட்பட 13 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் திலின கமகே புதன்கிழமை உத்தரவிட்டார்.
0 Comments