Home » » சிரேஸ் ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹருக்கு சேவைநலன் பாராட்டு விழா

சிரேஸ் ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹருக்கு சேவைநலன் பாராட்டு விழா

 


 (எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்)


ஆசிரிய கற்பித்தல் சேவையில் 36 வருடங்களை பூர்த்தி செய்து அண்மையில்( 1.05.2021)ஓய்வு பெற்ற பாடசாலையின் சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹருக்கு   சேவைநலன் பாராட்டு விழா பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை ) களுவாஞ்சிக்குடி யில் பாடசாலை அதிபர் திரு.எம்.சபேஸ் குமார் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை கலைக்கூடத்தில்  இடம்பெற்றது.
பாடசாலை ஆசிரியர் நலன்புரி சங்கம் ஒழுங்கு செய்திருந்த மேற்படி நிகழ்வில் மாணவர்களால் மேற்படி ஆசிரியர் மலர்மாலை சூடி வரவேற்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டு வாழ்த்துப் பத்திரம் கையளிக்கப்பட்டது.கல்வி கற்பித்தல்  புலத்தில் 36 வருடங்களை பூர்த்தி செய்துள்ள இவர் தனது ஆரம்பக் கல்வியை குருநாகல் மாவட்டத்திலுள்ள பக்மீகொல்ல அல் மினா மகா வித்தியாலயத்திலும் தரம் இரண்டு முதல் ஐந்து வரை சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்திலும்  , தரம் ஆறு முதல் உயர்தர உயிரியல் விஞ்ஞானப்பிரிவு வரை கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியிலும் சிறிது காலம் யாழ்ப்பாணம் வைத்தியேஸ்வரா கல்லூரியிலும் கல்வி கற்றார்.


1982 முதல்  1985 வரை மொரட்டுவ பல்கலைக் கழகத்திற்கு தேசிய டிப்ளோமா தொழில்நுட்பம் NDT (Agriculture Engineering) விவசாய பொறியியல் பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டு  அம்பாறை ஹார்டி சிரேஸ்ட தொழில்நுட்பக் கல்லூரியில் ஆங்கில மொழி மூலமாக மூன்று வருட கற்கையை நிறைவு செய்திருந்தார்.



இவரது தந்தை சாய்ந்தமருது கடற்கரையோர பிரதேச மக்கள் கல்வியில் பிரகாசிக்க வேண்டும் என்ற நோக்கில் அந்த கால கட்டத்தில் அமைச்சராக இருந்த மர்ஹும் எம்.எஸ்.காரியப்பர் அவர்களின் ஆலோசனையின் பேரில் சாய்ந்தமருது 6 ஆம் பிரிவில்  (தற்போது 17 ஆம் பிரிவு) சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம் என்ற பெயரில் ஒரு பாடசாலயை ஆரம்பித்து அதன் ஸ்தாபக அதிபராகவும் கடமையாற்றி இருந்தார்.தனது தந்தை வழியிலேயே தானும் கல்விப் புலத்திற்குள் நுழைய வேண்டும் என்ற ஆசையில் ஆசிரிய சேவையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஆசிரிய சேவையில் காலடி வைத்த இவர் 1985.12.26 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் உள்ள மல்வான அல் முபாரக் தேசியக் கல்லூரியில் (முஸ்லிம் ஆண் பெண் கலவன் பாடசாலை )முதல் நியமனத்தைப் பெற்று அங்கு உயர்தர விஞ்ஞானப் பிரிவையும் ஆரம்பித்து அதன் பகுதித் தலைவராக இருந்து மாணவர்களுக்கு தாவரவியல் பாடத்தை கற்பித்து கம்பஹா மாவட்டதிலிருந்தே மருத்துவம் , பொறியியல் , பல்மருத்துவம், விவசாயம், விஞ்ஞானத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல இவர் காரணமாக இருந்துள்ளார்.

10 வருடங்களாக மல்வான அல் முபாரக் தேசியக் கல்லூரியில் தாவரவியல் பாடத்தை கற்பித்த 1994 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் தான் கல்வி கற்ற கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரிக்கு (முஸ்லிம் ஆண்கள் பாடசாலை )இடமாற்றம் பெற்று வந்தார் அங்கு கடந்த 22 வருடங்களாக உயர்தர விஞ்ஞானப் பிரிவில் தாவரவியல் பாட ஆசானாகவும், கல்லூரியில் ஆங்கில பிரிவு bilingual ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதல் பகுதித் தலைவராகவும், தரம் 6 முதல் தரம் 8 வரையுள் பகுதிகளுக்கு பகுதித் தலைவராகவும் , ஆசிரிய நூலகராகவும், அதிபர் காரியாலய நிர்வாக பொறுப்பாளராகவும், விளையாட்டுக் குழு செயலாளராகவும், சாய்ந்தமருது கோட்டப் பாடசாலைக்கான சுற்றாடல் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
பொதுப்பணியில் ஆர்வம் கொண்ட இவர் கிழக்கு நட்புறவு ஒன்றியம், கல்முனை கலை இலக்கிய பொதுப்பணி ஒன்றியம் ஆகியவற்றிலும்  , சாய்ந்தமருது பிரேக் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபக செயலாளராகவும் சிறிது காலம் அக்கழகத்தின் தலைவராகவும் தனது பணியினை தொடர்ந்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |