Home » » உங்கள் கள்ளத்தனமான அரசியலை நீங்கள் நிறுத்த வேண்டும்: த.கலையரசன் எம்பி ஹரிஸ் எம்.பிக்கு பதிலடி

உங்கள் கள்ளத்தனமான அரசியலை நீங்கள் நிறுத்த வேண்டும்: த.கலையரசன் எம்பி ஹரிஸ் எம்.பிக்கு பதிலடி

 


துதிமோகன்)


எங்கள் சமூகம் சார்ந்து மாத்திரம் நாங்கள் செயற்பட்டிருந்தால் எமது இலக்கை நாங்கள் அடைந்திருப்போம். நாங்கள் தமிழ் பேசும் இனமென்ற ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் நீங்கள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு அரசியல் மாற்றங்களிலும் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுகின்றீர்கள். உங்கள் கள்ளத்தனமான அரசியலை நீங்கள் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சம்மந்தமான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்களின் பேச்சுக்குப் பதில் கொடுக்கும் வண்ணம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நாவற்காடு என்ற இடத்தில் முன்பள்ளி, தையல் நிலையம் மற்றும் சமூர்த்தி சங்கம், தாய்சேய் பராமரிப்பு நிலையம் ஆகியன இயங்கிக் கொண்டிருந்த அந்த இடத்தில் தற்போது பொலிஸ் நிலையம் இயக்கிக் கொண்டிருக்கின்றது. அந்த முன்பள்ளியில் பதினெட்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்திருக்கின்றார்கள். இவையெல்லாம் பொருட்படுத்தாது அங்கு அவசர அவசரமாக பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

உண்மையில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலே பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட வேண்டுமானால் ஒரு பொருத்தமான இடத்தில் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு கல்வி கற்கும், சுயதொழில் செய்யும் அந்த இடத்தைப் பொருட்படுத்தாது அங்கு பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அது பொருத்தமற்ற இடமாகவே இருக்கின்றது. எனவே வேறு ஒரு இடத்தில் அங்குள்ள மக்களின் விரும்பு வெறுப்புகளை அறிந்து இடங்களைத் தெரிவு செய்திருக்க வேண்டும்.

திடீரென இவ்வாறான செயற்பாடுகளைச் செய்யும் போது அங்கு கல்வி கற்றுவந்த பிள்ளைகள் எங்கு சென்று கல்வி கற்பது என்ற நிலைமை தற்போது உருவாகியிருக்கின்றது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உரிய தலையீடு செய்து ஒரு பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்ய வேண்டும்.

எமது தமிழ் மக்களின் போராட்டம் ஒரு கொள்கையை நோக்கி, எமது இருப்பை நோக்கி தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையிலேயே அகிம்சை, ஆயுத ரீதியில் நடைபெற்றும் தற்போதும் ஒரு ஜனநாயகக வழிமுறையில் அதனை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். தாங்கள் இந்த நாட்டிலே எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த அரசாங்கத்துடன இணைந்து அமைச்சுப் பதவிகளை எடுத்து நீங்கள் அதிகாரம் செலுத்தபவர்களாகவே இருந்துள்ளீர்கள். உங்கள் அதிகாரங்களைத் தமிழர்கள் மீதே செலுத்தியுள்ளீர்கள். நீங்கள் இப்போது உங்கள் சமூகம் சார்ந்த அழிவு விடயங்களைச் சொல்லியிருக்கின்றீர்கள். நானும் எமது சமூகம் சார்ந்த அழிப்பு விடயங்களைச் சொல்ல முடியும். அவ்வாறு சொன்னால் மீளவும் இந்த சமூகங்களுக்குள் குழப்படிச் சூழல் உருவாகிவிடும் என்ற அச்சத்தின் நிமித்தம் தவிர்க்கின்றேன்.

கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தாமல் இருப்பதற்காகத்தானே திட்;டமிட்டு தற்போது அரசோடு இணைந்திருக்கின்றீர்கள். எவ்வாறான அடாவடி வேலைகளை அந்த தமிழ்ப் பிரதேச செயலக விடயத்தில் செய்து கொண்டிருக்கின்றீர்கள். ஒவ்வொரு வாரங்களும் சுமார் இரண்டு இடங்கள் என்ற ரீதியில் எமது மக்களின் இடங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன. கடந்தவாரமும் பெரியநீலாவணையில் ஒரு இடம் கபளீகரம் செய்ய முற்பட்டது. திட்டமிட்டு முஸ்லீம் அமைப்புகளை உருவாக்கி எமது இடங்களை ஆக்கிரமிப்பு செய்வதில் மிகவும் வல்லவராகச் செயற்பட்டு வருகின்றீர்கள். தமிழ் மக்கள் தொடர்பில் நீங்கள் கருத்துச் சொல்ல வேண்டாம். நாங்கள் எப்போதும் இந்த நாட்டில் சிங்கள, முஸ்லீம் மக்களோடு இணைந்து வாழத்தான் விரும்புகின்றோம். உங்கள் கள்ளத்தனமான அரசியலை நீங்கள் நிறுத்த வேண்டும்.

நீஙகள் முஸ்லீம்களுக்காகக் குரல்கொடுப்பதாகக் கூறி எமது தமிழ் மக்களை அழித்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களால் எத்தனை தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. எங்களாலும் பட்டியலிட்டுச் சொல்ல முடியும். உங்களுடைய அரசியல் ரீதியாக நீங்கள் கபளீகரம் செய்ய முற்பட்ட பல விடயங்களை நாங்கள் முறியடித்திருக்கின்றோம்.

எங்கள் சமூகம் சார்ந்து மாத்திரம் நாங்கள் செயற்பட்டிருந்தால் எமது இலக்கை நாங்கள் அடைந்திருப்போம். தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் செயற்பட்டதன் காரணமாக எங்களுடைய சமூகமே இன்று எங்களை தள்ளிவைக்கக் கூடிய சூழல் இருக்கின்றது.

எனவே விடயங்களை அறிந்து பேச வேண்டும். நாங்கள் தமிழ் பேசும் இனமென்ற ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் நீங்கள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு அரசியல் மாற்றங்களிலும் தமிழர்களின் இடங்களை எவ்வாறு கபளிகரம் செய்யலாம் என்றே சிந்திக்கின்றீர்கள். இவ்வாறு ஒவ்வொரு அரசியலிலும் தமிழர்களுக்கெதிரான வேலையைச் செய்து விட்டு தற்போது ஒற்றுமை பற்றிப் பேசுகின்றீர்கள். இந்த ஒற்றுமையைக் குலைக்கின்ற அரசியலாவதியாக நீங்களே இருக்கின்றீர்கள்.

கல்முனையில் ஒவ்வொரு தமிழர்களும் எதிர்காலத்தில் இங்கு தமிழர்கள் வாழ முடியுமா என்ற வினாவோடு இருக்கின்றார்கள். கபளீகரத்திற்காக ஒவ்வொரு நாளும் ஏதோவொரு திட்டம் தீட்டப்படுகின்றது. அரச காணிகள், குளங்கள் போன்றன கபளீகரம் செய்யப்படுகின்றன. அங்கிருக்கும் உப பிரதேச செயலாளரின் அதிகாரதத்தினைக் குறைக்க முற்படுகின்றீர்கள். இதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றீர்கள். உங்களது இணைவு எல்லாம் தமிழர்களை நசுக்குவதற்காகத் தான் என்று தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |