Home » » சட்டவிரோதமற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்களை காத்திருந்து இடைநடுவில் கைதுசெய்வது சட்டவிரோதமானது...!!

சட்டவிரோதமற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்களை காத்திருந்து இடைநடுவில் கைதுசெய்வது சட்டவிரோதமானது...!!

 


(ஊடக சந்திப்பு - மக்கள் விடுதலை முன்னணி - 2021.08.06

பத்தரமுல்ல, மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில்)
அரசாங்கம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்ற அடக்குமுறைச் செயற்பாங்கு பற்றி எமது எதிர்ப்பினை தெரிவிப்பதற்காக இந்த ஊடக சந்திப்பு நடாத்தப்படுகின்றது. நியாயமான காரணங்களின்பேரில் கடந்த நாட்களில் பல ஆர்ப்பாட்டங்கள் தோன்றின. கொத்தலாவல சட்டம் மூலமாக கல்வியை தனியார்மயப்படுத்துவதற்கும் மிலிட்டரிமயப்படுத்துவதற்கும் எதிராக அதைப்போலவே இற்றைவரை தீர்க்கப்பட்டிராத அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதைப்போலவே பசளைப் பிரச்சினையை முதன்மையாகக்கொண்டு மிகவும் நியாயமான ஆர்ப்பாட்டங்கள் உருவாகின.


அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு செவிசாய்த்து நியாயமான பதில்களை பெற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக ஒருபுறத்தில் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக மக்கள் அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்பவும், மறுபுறத்தில் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கின்ற செயற்பாட்டாளர்களை ஓரங்கட்டி வேட்டையாடவும் அரசாங்கம் முற்பட்டுள்ளது. இது மிகவும் பாரதூரமான விடயமாகும். இந்த அமைதியான ஆர்ப்பாட்டங்கள் அரசியலமைப்பினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையைப் பயன்படுத்தியே நடாத்தப்படுகின்றன. அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அந்த உரிமையை ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் பாவித்து வருகிறார்கள். அந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து தீர்த்துவைப்பதற்குப் பதிலாக அடக்குவதற்காக மேற்கொண்ட பல படிமுறைகளை நாங்கள் கடந்த நாட்களில் கண்டோம்.

நேற்று (05) இரவு தொலைக்காட்சி உரையாடலில் கலந்துகொண்டு வெளியில் வந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை ஊடக நிறுவனத்திற்கருகில் காத்திருந்து கைதுசெய்தார்கள். குறைந்தபட்சம் கைதுசெய்வதற்கான குற்றச்சாட்டினை முன்வைக்காமல் நீதிமன்ற அழைப்பாணையின்றி அவர் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். சனநாயகத்தின் பக்கத்தில் பார்த்தால் இது ஒரு ஆட்கடத்தலாகும். இந்த நிலைமையை தோற்கடிக்கவேண்டும். அதைப்போலவே நேற்று பகல் நடைபெற்ற கல்வி மிலிட்டரிமயப்படுத்தலுக்கு எதிரான மக்கள் இயக்கம் நடாத்திய ஆர்ப்பாட்டத்துடன் சம்பந்தப்பட்ட ஒருசிலர் கைதுசெய்யப்பட்டார்கள்.

அது தொழிற்சங்கங்கள், வெகுசன அமைப்புகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சேர்ந்து மிகவும் அமைதியாக கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு மேற்கொண்ட ஆர்ப்பாட்டமாகும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்துகொண்டிருந்த ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் தலைவர் கைதுசெய்யப்பட்டார். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் களணிய பல்கலைக்கழகத்தின் மாணவரொருவர் கைதுசெய்யப்பட்டார். அதைப்போலவே ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் திரும்பிச்சென்று கொண்டிருந்த பஸ் வண்டியொன்றை இடையில் நிறுத்தி சிவில் உடை தரித்திருந்த கும்பலொன்று சிக்காகோவில் கப்பம்பெற கடத்திச் செல்வதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள்.

ஆர்ப்பாட்டம் செய்வது சட்டவிரோதமான செயலன்று. எனவே ஆர்ப்பாட்டக்காரர்களை கைதுசெய்வதற்கான எந்தவிதமான சட்டபூர்வமான அதிகாரமும் பொலீஸிற்கு கிடையாது. மறுபுறத்தில் ஆர்ப்பாட்டம் செய்கின்ற இடத்தில் சட்டம் மீறப்படுமாயின் அந்த இடத்தில் கைதுசெய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் வாகனங்களின் பின்னால் சென்று, முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்து திட்டமிட்டு வேட்டையாடுகிறார்கள்.

இவ்விதமாக மனிதர்களை கடத்த, வேட்டையாட எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. அரசாங்கம் தற்போது செய்வது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை வேட்டையாடுவதாகும். இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். அத்துடன் நின்றுவிடாமல் போராட்டங்களில் உள்ள தலைவர்களின் வீடுகளுக்குச்சென்று பயமுறுத்துகின்ற செயற்பாங்கொன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்கள். அதற்கு முன்னர் இலங்கை ஆசரியர் சேவைகள் சங்கத்தின் தலைவர் தோழர் மகிந்த ஜயசிங்கவின் வீட்டுக்குப் போயிருந்தார்கள்.

இவ்விதமாகப் பயமுறுத்தி அத்துடன் நின்றுவிடாமல் கடந்த 04 ஆந் திகதி கொழும்பில் நடைபெற்ற ஆசிரியர்- அதிபர் ஆர்ப்பாட்டத்தை நிறைவுசெய்து சென்றுகொண்டிருந்த ஆசிரியர்களை பல இடங்களில் கைதுசெய்தார்கள். தெமட்டகொட, பேலியகொட, வெள்ளவத்தை பொலீஸாரால் இவ்விதமாக கைதுசெய்யப்பட்ட அதிபர்களும் ஆசரியர்களும் கைதுசெய்யப்பட்டமைக்கான குற்றச்சாட்டுகளைக் கூறக்கூட பொலீஸாரால் இயலவில்லை.

கைதுசெய்யப்பட்டவர்கள் துறைமுக பொலீஸில் தடுத்து வைக்கப்படுகிறார்கள். அவர்கள் கைதுசெய்யப்பட்ட பொலீஸிலேயே இருக்கவேண்டும். துறைமுகப் பொலீஸில் தடுத்துவைப்பது தவறான தடுத்துவைத்தலாகும். குறைந்தபட்சம் சட்டத்தரணிகளுக்குக்கூட பொலீஸிற்கு செல்ல அனுமதி கிடையாது. வழக்கறிஞர்களின் உதவியைப் பெற்றுகொள்வதற்கான அடிப்படை உரிமையையும் மீறிவிட்டார்கள். பயங்கரவாதிகளை பிடித்துக்கொள்ளவில்லையே, அவர்களின் உறவினர்களுக்கு அவர்களைக் காட்டவேண்டும்.

சாதாரண சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை சட்டதரணிகளுக்கு பார்க்கக்கொடுக்காமல் தடுத்துவைத்துள்ளார்கள். அரசாங்கம் காட்ட முனைவது பீதியை உருவாக்கிக் காட்டுதலையாகும். அதன் ஊடாக போராட்டங்களை அடக்க அரசாங்கம் முயற்சி செய்கின்றது. திருவாளர் கோட்டாபயவின் அரசாங்கமும் திருவாளர் சரத் வீரசேகரவின் பொலீஸும் நியாயமான உரிமைகளுக்காக போராடுபவர்களை வேட்டையாடுவதையே புரிந்துகொண்டிருக்கின்றது.

இந்த பொலீஸிற்கப் பொறுப்பான அமைச்சரே பியுமி ஹன்சமாலியை தனிமைப்படுத்தலுக்காக கொண்டுசெல்கின்றபோது பஸ்வண்டியை திருப்பிக்கொண்டுவந்து ஆடைகளை எடுத்துக்கொடுத்தார். அதே அமைச்சர் ஆசிரிய ஆசிரியைகளை கைதுசெய்து பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. ஆசிரியைகளுக்கு விசேட தேவைகள் நிலவுகின்றன. அவர்களுக்கு ஓர் உடையைக் கொடுக்கக்கூட இடமளிக்காமல் சட்டம் காடுமண்டிப் போய்விட்டது. தமக்கு விருப்பமானவர்களுக்கு ஒரு சட்டம். விரும்பாதவர்களுக்கு வேறொரு சட்டம்.

தற்போது நேர்ந்துள்ளதோ குற்றச்செயல் புரிந்தவர்களை விடுதலைசெய்து பதவிகளை வழங்கி உரிமைகளுக்காக போராடுகின்ற அனைவருக்கும் அடக்குமுறையைக் கொண்டுவருவதாகும். திருவாளர் கோட்டாபய ராஜபக்ஸவை வெற்றிபெறச் செய்வித்து இதைத்தானா எதிர்பார்த்தீர்கள் என்று நாங்கள் இந்த நாட்டுப் பிரசைகளிடம் கேட்கிறோம். இதற்கு எதிராக செயற்படுமாறு நாங்கள் சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். ஆசிரியர்களிடமிருந்து, அதிபர்களிடமிருந்து, மாணவர்களிடமிருந்து இந்த நிலைமை ஆரம்பிக்கப்பட்டிருக்கக்கூடும். ஆனால் முடிவடைவது அனைவரதும் வீடுகளுக்குப் போய்தான். அதனால் இதனைத் தோற்கடிக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னரே அவற்றைத் தடுப்பதற்கான கட்டளை பெற நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். ஆனால் நீதிமன்றம் அந்த கட்டளையைப் பிறப்பிக்கவில்லை. ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கான உரிமை அரசியலமைப்பில் வழங்கப்படவில்லை. பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதனையுமே நீதிமன்றம் பொருட்படுத்தவில்லை.

அதனால் சரீரப் பிணை வழங்கப்பட்டது. சட்டத்துறை திணைக்களத்தில் இருந்து வந்தவரே இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார். அதைப்போலவே தனிமைப்படுத்தலில் வைக்குமாறும் கோரினார். நீதிமன்றம் இவையிரண்டையுமே நிராகரித்தது. இவர்கள் சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். சட்டவிரோதமற்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை போகும் வழியில் காத்திருந்து கைது செய்தமை சட்டவிரோதமானது. பொலீஸாரைப் பயன்படுத்தி சட்டவிரோத செயல்களைப் புரிந்துகொண்டிருப்பது அரசாங்கமே.

அவர்கள் தற்போது பயணித்துக் கொண்டிருப்பது தம்மை உருவாக்கிய மக்களை தாமாகவே இழப்பித்துக் கொள்வதாகும். ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்களில் ஏறக்குறைய 70% திருவாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாக்களித்தவர்களே. அவர்களின் ஆர்ப்பாட்டங்களை அடக்க செயலாற்றுவது அவர்களின் அத்திவாரத்தை இழக்கச் செய்விப்பதாகும். உப்பு உருவாவதும் தண்ணீரில்தான்: உப்பு கரைவதும் தண்ணிரிலே என ஊர்களில் ஒரு பேச்சுவழக்கு இருக்கின்றது. அரசாங்கம் தற்போது பயணித்துக் கொண்டிருப்பது தம்மை அரியாசனம் ஏற்றிய மக்களுக்கு எதிராகவே பொல்லை உயர்த்திப் பிடிப்பதற்காகவே. திருவாளர் கோட்டாபய ராஜபக்ஸமார்களை அரியாசனத்தில் ஏற்றிய இந்த மக்களே குறுகிய எதிர்காலத்தில் அவர்களை அரியாசனத்தில் இருந்து இறக்குவார்களென நாங்கள் நம்புகிறோம்.

பொலீஸார் கைதுசெய்வார்களாயின் சீருடையில் வந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவ்வாறின்றேல் அழைப்பாணை சமர்ப்பித்து கைதுசெய்வதுதான் சட்டம். ஆனால் தற்போது இடம்பெறுவது சிவில் உடை தரித்து வந்து வெள்ளைவேன் கலாசாரத்தின் நிழலைக் காட்டுவதாகும். யாருமே இல்லாத இடத்திலிருந்து கடத்திச் சென்றால் அவர்கள் கொண்டுசெல்லவில்லை என பொலீஸார் கூறுவார்கள்.


இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். நியாயமான ஆர்ப்பாட்டங்களை செய்பவர்களை அடக்குவதன் மூலமாக மற்றுமொரு போராட்டக் களத்தை அமைத்துக் கொள்கிறார்கள். நியாமான கோரிக்கையின்பேரில் போராடுகின்ற மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு மேலதிகமாக பொலிஸ் அடக்குமுறைக்கு எதிராக போராடுபவர்கள் ஒருங்கிணைதல் இடம்பெறும்.


அரசாங்கத்திற்கு தேவை போராட்டங்களை அதிகரித்துக் கொள்வதா, அப்படியில்லாவிட்டால் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதா என நாங்கள் கேட்க விரும்புகிறோம். அடக்குமுறைமையைப் பிரயோகித்து போராட்டங்களை நிறுத்திவிட முடியாது. உலகில் எங்கேயும் அவ்வாறு நடந்ததில்லை. அடக்குமுறை எப்போதுமே புதிய போராட்டங்களை உருவாக்கும். போராட்டங்களின் வேகத்தை அதிகரிக்கும்.


புதிய குழுவினர் போராட்டத்தில் ஒருங்கிணைவார்கள். எனவே உடனடியாக அரசாங்கம் இந்த அடக்குமுறையை நிறுத்தி நியாயமான ஆர்ப்பாட்டங்களை செய்பவர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும். அது பெரிய விடயமல்ல. அனைவருமே வேண்டுகொள் விடுக்கின்ற கொத்தலாவல சட்டத்தை அகற்றிக்கொள்ள முடியும். ஏற்கெனவே இரண்டு தடவைகள் சுருட்டிக் கொள்ளப்பட்டது. இந்த சட்டத்தை எடுத்துக்கொள்வதில்லையென அரசாங்கம் கூறுமானால் அதற்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் நின்றுவிடும். மிகவும் எளிமையானது.


ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடு சம்பந்தமாக கொள்கையென்றவகையில் ஏற்றுக்கொண்டு தீர்க்கின்ற வழிமுறையொன்றை முன்வைத்தால் அந்த போராட்டம் நின்றுவிடும். ஆசிரியர்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை கேட்கவில்லையே. இந்த கோரிக்கைகளுக்காக புரிகின்ற ஆர்ப்பாட்டங்களை முட்டாள்த்தனமாக பொலீஸாரை ஈடுபடுத்தி அடக்க அரசாங்கம் முயற்சிசெய்யுமாயின் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் அலை வரை பயணிக்க இடமுண்டு.


கொரோனா நிலைமையைக்காட்டி ஆர்ப்பாட்டங்களை அடக்க அரசாங்கம் நினைப்பதோடு அரசாங்கத்தின் தலைக்கனம் பொருந்திய நடத்தை காரணமாக கொரோனா வியாபித்து வருகின்றது. அரசாங்கம் மனித உயிர்களைப் பார்க்கிலும் தம்மைச் சுற்றியுள்ள தீத்தொழில் புரிபவர்களின் தொழில்முயற்சிகளைப் பாதுகாக்க முயற்சி செய்கின்றது. ஆர்ப்பாட்டங்களால் கொரோனா பரவுவதாக பிரச்சாரம் செய்தாலும் மறுபுறத்தில் ரஸ்யாவிலிருந்து உல்லாசப் பயணிகளை கொண்டுவரப் போகிறார்கள். அவர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளவோ பிசீஆர் செய்துகொள்ளவோ தயாராக இல்லை.


கடந்த காலந்தொட்டே நாட்டை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது யார்? அரசாங்கத்திற்கு கொரோனா ஒரு செல்வமாகும். அவர்கள் கொரோனா எனக் கூறுவதை விரும்புகிறார்கள். கொரோனாவைக் காட்டி மக்களின் வாயை மூடி மக்களுக்கு விரோதமான அனைத்தையுமே செய்துவருகிறார்கள். மறுபுறத்தின் மக்களின் உரிமைகளை கொடுக்காமல் இருக்கிறார்கள். அதைப்போலவே நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 100 பேர் கொரோனாவால் உயிரிழக்கின்றதோடு அவசியமான எந்தவிதமான வசதிகளையும் வழங்கவில்லை. பொறுப்பின்றி நடந்துகொள்கிறார்கள்.


ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட முன்னராக திருமண வைபவங்கள், மசாஜ் சென்டர்களைத் திறக்க, சந்தைகளைத் திறத்தல் போன்ற மக்கள் குவிகின்ற இடங்களை படிப்படியாக திறந்துவிட்டார்கள். அதற்கு மேலதிகமாக கடந்த இரண்டாம் திகதி தொடக்கம் அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்காக அழைத்தார்கள்.


அரச ஊழியர்கள் பொதுப்போக்குவரத்து சேவைகளில் நசுங்கிக்கொண்டு போகிறார்கள். அவசியமான அளவுக்கு போக்குவரத்து வசதிகள் கிடையாது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு மீற்றர் இடைவெளியை கடைப்பிடிக்க முயற்சி செய்கிறார்கள். பஸ்களில், புகையிரதங்களில் அந்த இடைவெளியை வைத்துக்கொள்ள முடியாது. கொரோனா கட்டுப்பாட்டினைக் கைவிட்டு நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கின்ற குழுக்களுக்கு எதிராக கொரோனாவைக் காட்டி மக்கள் அபிப்பிராயத்தை உருவாக்குகிறார்கள். எந்தவிதமான தர்க்கமும் இல்லாதவாறே அரசாங்கம் நடந்துகொள்கின்றது. 02 ஆந் திகதி தொடக்கம் அரச ஊழியர்கள் அனைவரும் சேவைக்காக அழைக்கப்பட்டு 05 ஆந் திகதி கர்ப்பிணித் தாய்மார்கள் சேவைக்காக அழைக்கப்படுவதை நிறுத்துகிறார்கள்.


மறுபுறத்தில் அரச ஊழியர்கள் இரண்டு படிமுறைகளின்கீழ் சேவைக்கு அழைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுகின்றது. எவ்விதமான சுயபுத்தியும் இல்லாத அரசாங்கமாக நடவடிக்கை எடுக்கிறார்கள். எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கு எல்லா வர்த்தமானிகளையும்போல் ஏனைய செயற்பாடுகளையும் றிவேர்ஸ் பண்ணுவதே இருக்கின்றது. இவ்விதமாக ஒரு நாட்டைக் கொண்டுபோக முடியாது. திருவாளர் கோட்டாபய ராஜபக்ஸ வந்ததும் தூரநோக்குடன் தீர்மானங்களை மேற்கொள்கின்ற, வியத்மகவின் புத்திஜீவிகளின் ஆட்சியொன்று எதிர்பார்க்கப்பட்டது.


தற்போது நேர்ந்துள்தோ இன்று அடிக்கின்ற கெஸற் நாளை மாற்றப்படுவதாகும். அரசாங்கத்தின் இந்த ஆற்றாமையை மூடிமறைத்துக் கொள்வதற்காக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்ற அடக்குமுறையை உடனடியாக நிறுத்தவேண்டும். எவருமே அநீதியான கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடமாட்டார்கள்.


ஆர்ப்பாட்டங்களின் மத்தியில் கடத்திச் செல்கின்ற அடக்குமுறைசார்ந்த செயல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு நாங்கள் நிர்ப்பந்திக்கிறோம். பிடிவாதக்குணம்பொருந்திய, முட்டாள்த்தனமான அடக்குமுறை செயற்பாங்கினைத் தோற்கடிக்க ஒன்றுசேருமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். அதைப்போலவே நாங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம் நீங்கள் பயணித்துக்கொண்டிருப்பது அரியாசனத்தை இழக்கின்ற பாதையிலாகும். திருவாளர் கோட்டாபய ராஜபக்ஸவை உள்ளிட்ட ராஜபக்ஸ குடும்பத்தை அரியாசனம் எற்றிய மக்களே அவர்களை அரியாசனத்தில் இருந்து இறக்குகின்ற தினம் வெகுதூரத்தில் இல்லை என நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறோம்.
ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமைக்கான நேரத்தில் வாக்குறுதியொன்றாக ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டினை தீர்த்துவைப்பதாக கூறினார்கள். ஆனால் அதனை மேற்கொள்ளாததால் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த பெருந்தொகையான ஆசிரியர்களும் அதிபர்களும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கிறார்கள். அது மக்கள் விடுதலை முன்னணியின் தேவைக்காக நடைபெறுகின்ற ஒன்றென அரசாங்கம் கூறுமேயானால் அதைப்போன்ற முட்டாளத்தனம் வேறு ஒன்றுமே கிடையாது.


மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் முன்னணி வகிக்கின்றன. ஆனால் எம்மனைவரதும் தேவையாக அமைவது ஆசரியர்களின் நியாயமான சிக்கல்களுக்கு தீர்வு பெற்றுக்கொள்வதாகும். ஆனால் அரசாங்கத்திற்கு எவரையாவது பலியெடுத்து போராட்டங்களை அடக்கவேண்டிய தேவை இருக்கின்றது. நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கிறோம் ஆசிரியர்களின் இந்த போராட்டம் நியாயமானதா? இல்லையா? என்று. அரசாங்கத்திற்கு உள்ளது பணம் இல்லை என்பதல்ல, பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறையை முன்வைப்பதாகும்.


அரசாங்கத்தின் விரயம்நிறைந்த செலவுகளுக்கு பணம் கிடையாது எனக் கூறுவதில்லை. திருடும்போது இதுதான் மிகச்சிறந்த நேரம். ஆனால் உரிமைகளைக் கேட்கும்போது அது நல்லநேரமல்ல எனக் கூறுகிறார்கள். கொரோனாவுக்குள்ளே பொருட்களின் விலையை அதிகரிப்பது அரசாங்கம் நல்ல நேரத்திற்கு செய்கின்ற வேலையா? ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தவேளையில் நிலவிய பொருட்களின் விலைகளல்ல தற்போது நிலவுவது.
முதலாளித்துவ அரரசாங்கங்களுக்கு மனிதர்களின் வேண்டுகோள்களை வழங்க நல்லநேரம் இருந்ததில்லை. அரசாங்கம் சகுணம்பார்த்து கொடுக்கின்ற நேரத்தில் அல்ல மக்கள் தமது கோரிக்கைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தமது பிரச்சினையை தாம் உணர்ந்த நேரத்தில்தான். அரசாங்கம் தற்போது கூறுவது பணம் இல்லை என்றுதான். ஆனால் சனாதிபதி தேர்தலுக்கு முன்னர் திருவாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் ஊடக கலந்துரையாடலின்போது ஊடகவியலாளர் பணத்தை எவ்வாறு தேடிக்கொள்வது என்று கேட்டார். திருவாளர் கோட்டாபய ராஜபக்ஸ பதிலளிக்காமல் திருவாளர் மகிந்தவை பார்த்ததும் அவர் கூறுியது யுத்தகாலத்திலும் பணம் தேடிக்கொள்ள முடியாது எனக் கூறினாலும் நாங்கள் பணத்தை தேடிக்கொண்டோம் என்றே. நாங்கள் கூறுவது அவ்விதமாக கூறியதுபோல் பணத்தை தேடிக்கொண்டு பிரச்சினைகளை தீர்க்குமாறே. அதன் பின்னர் திருவாளர் பசில் ராஜபக்ஸ வந்தவுடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக கூறினார்கள். தற்போது திறைசேரி காலியாகி விட்டது எனக் கூறுகிறார்கள். அதிகாரத்தைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கான வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள்.


அதிகாரத்தைப் பெற்ற பின்னர் அவர்கள் பணத்தை விரயமாக்குகிறார்கள். மக்கள் எதையாவது கேட்டால் திறைசேரி காலியெனக் கூறுகிறார்கள். அது வெறுமையானதென்றால் அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர் திருவாளர் மகிந்த ராஜபக்ஸ: முன்னாள் சனாதிபதி மைத்திரிபாலவும் ரனில் அரசாங்கமுமே பொறுப்புக்கூறவேண்டும் திறைசேரியில் பணம் இல்லாவிட்டால் இந்த ஒட்டுமொத்த முறைமையுமே பொறுப்புக்கூற வேண்டும். அப்படிப்பட்ட அரசாங்கங்கள் நாட்டுக்குத் தேவையில்லை. திறைசேரியை வெறுமையாக்குகின்ற அரசாங்கங்கள் நாட்டுக்கு பிரயோசனமில்லை என மக்களுக்கு கூறுகிறோம். அப்படியானால் திறைசேரியை நிரப்பமுடியாத பொருளாதார முறைமையை மாற்றியமைத்து திறைசேரியை நிரப்பி மக்களுக்கு நியாயம் வழங்கக்கூடிய அரசாங்கமொன்றை நிறுவுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |