நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் வேகமும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி செயற்றிட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி முதற்கட்டமாக, கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு செலுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது குறித்து, சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் சரியான திகதி இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். நாட்டில் சுமார் 45 லட்சம் பாடசாலை மாணவர்கள் உள்ளதாகவும், அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சுடன் இணைந்து, இந்த திட்டத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்
0 Comments