Home » » சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் முன்னெடுப்பு

சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் முன்னெடுப்பு

 


இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இன்று காலை முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களின் ஒருவரான எஸ்.சிவயோகநாதன் தலைமையில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு உள்ளக ரீதியாக எந்தவித நீதியும் கிடைக்கப்போவதில்லையெனவும் சர்வதேச நீதிமன்றில் இலங்கை நிறுத்தப்பட்டு தமக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இன்று தமிழ் மக்கள் வடகிழக்கில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவருவதாகவும் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் இந்த நாட்டில் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையுள்ளதாகவும் அதன் காரணமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான முடிவினை எடுக்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |