சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் சுயாதீன அபிவிருத்திக்கான பெண்கள் செயற்பாட்டுவலையமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் பெண்கள் உரிமைகளை வலியறுத்தும் முகமாக மூன்று கோரிக்கைகளை முன்நிறுத்தி கவனயீர்ப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது.
நாட்டில் 52 சதவீதம் பெண்கள் உள்ள நிலையில் பாராளுமன்றம் போன்ற உயர் தீர்மானங்களை மேற்கொள்ளும் சபையில் பெண்கள் பிரதிதித்துவம் வெறுமனே 5.3 வீதங்களே காணப்படுகின்ற நிலையில் அவை மாற்றப்பட்டு சட்டவாக்கல் சபையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்தல், தற்போது இராஜாங்க அமைச்சின் கீழுள்ள மகளிர் விவகார அமைச்சினை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக உருவாக்கி பெண் அமைச்சரின் ஒருவரின் கீழ் கொண்டுவருதல், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படல் என்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி இன்றைய இந்த கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசே பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் உமது பங்கு என்ன? மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அரசு உறுதிப்படுத்துமா? பெண்களின் மனித உரிமைகள் எங்கே? வீட்டினை ஆளும் பெண்கள் நாட்டினை ஆளமுடியாதா? போன்ற சுலோக அட்டைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடந்து கவனயீர்ப்பு நிகழ்வுக்கு வருகை தந்திருந்த உதவி அரசாங்க அதிபரிடம் மேற்குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டு போராட்டம் நிறைவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments