Home » » உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு!!

உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு!!


 மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை (திங்கட்கிழமை) காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணர்வு தவிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் புதன்கிழமை ஆரம்பமான போராட்டம் ஐந்தாவது நாளாகவும் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுவருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,மண்முனை மேற்கு பிரதேசசபை தவிசாளர் சண்முகராஜா,மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் நா.புஸ்பலிங்கம் மற்றும் மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் பிரதிதவிசாளர்,பிரதேசசபை உறுப்பினர்கள்,மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இன்று பிற்பகல் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் சிலரின் பெயரை வாசித்து அவர்களுக்கு தடையுத்தரவு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.எனினும் அவர்கள் குறிப்பிட்ட பெயரில் அங்கு யாரும் இல்லையென தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதியில் போராட்டம் நடாத்தமுடியாது அங்கிருந்து நாளை காலை 9.00மணிக்கு முன்னர் வெளியேறிச்செல்லுமாறு பொலிஸாரினால் பணிக்கப்பட்டதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

சுகாதார நடைமுறைகளைப்பேணி மிகவும் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டுவரும் மக்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர் நடந்துகொண்டுள்ளதாக அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்தார்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை அவர் கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததாகவும் குறித்த பெண்களின் அனுமதியின்றி குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நாளை நீதிமன்ற உத்தரவுடன் வருவதாகவும் காலை 09.00மணிக்கு முன்பாக அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என அச்சுறுத்தும் பாணியில் தெரிவித்தாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |