மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை பிரதேசத்தில் 178 சிங்கள குடும்பங்களை குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் உண்மையாக இங்கு குடியிருக்காத சிங்கள மக்களுக்கு ஆதரவாக உங்கள் பதவியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பிழையான விடயத்துக்கு துணை போகவேண்டாம். மீறிச் செயற்பட்டால் மக்கள் உங்களுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்துவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை என்கின்ற மாங்கேணி கிராம அதிகாரிக்குட்பட்ட தெற்கு பிரதேசத்தில் 178 சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த மக்களை குடியேற்றுவதற்கான செயற்திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகவும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, அந்த பகுதியில் குடியிருந்த சிங்கள மக்கள் குடியிருந்து 1985 ஆம் ஆண்டு யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்ததாக காரணம் காட்டுகின்றனர். அந்த 178 குடும்பங்களும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் இங்கு இருக்கவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றது.
இந்த செயற்திட்டம் 2011 ஆரம்பிக்கப்பட்ட போது இது தொடர்பாக நான், காணி விவகார அமைச்சருடன் பேசி அதனை தடுத்து நிறுத்தியிருக்கின்றேன்.
ஆனால் தற்போது வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 178 பேருக்கும் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்று திட்டமிட்டு சிங்களகுடியேற்றத்தை அமைப்பதற்கு சிங்கள அதிகாரிகள் செயற்படுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்த நாடு ஒன்றாக இருந்தால் நீதி ஒன்றாக இருந்தால் இவ்வாறான செயற்பாடுகள் நடாத்தப்படமுடியாது என்றார்.
0 comments: