Home » » மாவீரர் நாள் நினைவேந்தல்- வெளியானது யாழ்.நீதிமன்றின் தீர்ப்பு

மாவீரர் நாள் நினைவேந்தல்- வெளியானது யாழ்.நீதிமன்றின் தீர்ப்பு

 


யுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதாலும், மாவட்ட மேல் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதாலும் வழக்கை விசாரணை செய்ய முடியாதென குறிப்பிட்டு நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நீண்டநேர சமர்ப்பணங்களின் பின்னர் மன்று இதனை அறவித்தது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதன் போதே குறித்த வழக்கினை விசாரிப்பதற்கான அதிகாரம் மாகாண நீதிமன்றுக்கு இல்லையென தெரிவித்து நீதிமன்றம் வழக்கினை தள்ளுபடி செய்தது.

எதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன், அர்ச்சுனா, காண்டீபன், சயந்தன் என சுமார் 15 இற்கும் அதிகமானோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

பிரதிவாதிகள் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |