இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 287 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில், நாட்டில் நேற்றைய நாளில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 704 பேர் அடையாளங் காணப்பட்டனர்.
இதன்படி, திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 13 ஆயிரத்து 628 தொற்றாளர்கள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான ஐவர் நேற்றையதினம் உயிரிழந்தனர்.
இதன்படி, கொழும்பு 13 ஜிந்துபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
புற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று காரணமாக அவர் உயிரிழிந்துள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
புற்றுநோய் மற்றும் கொரோனா நிமோனியா தாக்கம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 88 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருதய நோய் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட இருதய நோயினால் அவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு 8 பொரளை பிரதேசத்தை சேர்ந்த 79 வயதான ஆண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நோய் அறிகுறிகள் இதற்கு காரணம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 88 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று மற்றும் இருதய நோய் ஆகியவை காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆக காணப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 11 ஆயிரத்து 495 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில், ஐயாயிரத்து 734 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 562 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments