Home » » யாருடன் போராடுவதற்காக பாதுகாப்புக்காக 355 பில்லியன் நிதி ஒதுக்கீடு – பாராளுமன்றத்தில் விக்கினேஸ்வரன் கேள்வி

யாருடன் போராடுவதற்காக பாதுகாப்புக்காக 355 பில்லியன் நிதி ஒதுக்கீடு – பாராளுமன்றத்தில் விக்கினேஸ்வரன் கேள்வி


 2021 ஆம் ஆண்டு யாருடன் போராடுவதற்காக 355 பில்லியன் ரூபாவை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளீர்கள். தமிழர்களுடனா, இந்தியர்களுடனா அல்லது மேற்கத்தைய நாட்டவர்களுடனா போராடப்போகின்றீர்கள் என தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.


அத்துடன் தமிழர்களை நம்பி அவர்களின் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அவர்களுக்குரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது. நாம் நாட்டைப்பிரிக்க கேட்கவில்லை. ஒரே நாட்டுக்குள் எம்மை நாமே ஆள வழி விடுங்கள் என்றே கேட்கின்றோம். அவ்வாறு செய்தால் நாமும் எமது இலட்சக்கணக்கான புலம்பெயர் தமிழ் உறவுகளும் உங்களுடன் சேர்ந்து இந்த நாட்டை முன்னேற்ற தயாராகவுள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

2021 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவுக்கு அபரிமிதமான தொகையை ஒதுக்கியுள்ளீர்கள். 2019 ஆம் ஆண்டு பாதுகாப்புக்கு 306 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்த நீங்கள் 2021 ஆம் ஆண்டுக்கு 49 பில்லியன் ரூபாவைக்கூட்டி 355 பில்லியன் ரூபாவை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளீர்கள். நீங்கள் யாருடன் போராடுவதற்காக இந்தளவு தொகையை ஒதுக்கியுள்ளீர்கள்? தமிழர்களுடனா ,இந்தியர்களுடனா அல்லது மேற்கத்தைய நாட்டவர்களுடனா போராடப்போகின்றீர்கள்?

நீங்கள் உங்கள் முகத்துடன் கோபித்துக்கொண்டு உங்கள் மூக்கை வெட்டப் பார்க்கின்றீர்கள். நாட்டின் ஒரு சாராரை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதால்தான் போர்க்கருவிகள், பீரங்கிகள்,தற்பாதுகாப்பு கவசங்களை வாங்கிக்குவிக்கின்றீர்கள். காலாட் படைகளை அதிகரிக்கின்றீர்கள். பெரும்தொகைகடற்படை உபகரணங்களை வாங்குகின்றீர்கள்.

இதுவரை கண் மண் தெரியாமல் வாங்கிக்குவித்ததால்தானே எமது தேசியக்கடன் இந்தளவ க்கு உயர்ந்துள்ளது.2021ஆம் ஆண்டில் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் 1.9 ட்ரில்லியன் ரூபா. உத்தேச செலவு என்றுமில்லாதவாறு 3.52 ட்ரில்லியன் ரூபாவாக உயரப்போகின்றது. 1.56 ட்ரில்லியன் ரூபா விழுக்காட்டை எப்படி சமாளிக்கபோகின்றீர்கள்?இது நீங்கள் தமிழர்களை நம்பாததால் வந்தவினை. உங்கள் தேசியக்கடன் எங்களையும் பாதிக்கின்றது என்பதனை மறந்த விடாதீர்கள்.

விரைவில் உங்களை நம்பத்தகுந்த கடன் கேட்பவர்களாக நாடுகள், நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க முடியாது நீங்கள் தவிக்கின்றீர்கள். எவ்வாறு மேலும் கடன் தர முடியுமெனக் கேட்பார்கள்.

தமிழர்களை நம்பி அவர்களின் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அவர்களுக்குரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது. நாம் நாட்டைப்பிரிக்க கேட்கவில்லை. ஒரே நாட்டுக்குள் எம்மை நாமே ஆள வழி விடுங்கள் என்றே கேட்கின்றோம். அவ்வாறு செய்தால் நாமும் எமது இலட்சக்கணக்கான புலம்பெயர் தமிழ் உறவுகளும் உங்களுடன் சேர்ந்து இந்த நாட்டை முன்னேற்ற தயாராகவுள்ளோம். எனவே இது கால வரையும் சிந்தித்த வழியிலேயே சிந்திக்காது புது விதமாக சிந்திக்க பழகுங்கள் என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |