ஸ்ரீலங்கா வரலாற்றில் தீர்மானகரமான நாளாக இன்றைய நாள் அமையப் போவதாக தென்னிலங்கை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. எதிர் கட்சிகள் ஓரணியில் வரிந்து கட்டிக் கொண்டிருக்கையில், ஆளும் தரப்பு வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
இதற்கிடையில், ஆளும் தரப்பில் உள்ள பங்காளிக் கட்சிகள் சில சரத்துக்கள் தொடர்பில் முரண்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தன. எனினும், தற்போது அவர்களும் உடன்பாட்டுக்குள் வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்க மற்றும் பேராசிரியர் திஸ்ஸா விதான ஆகியோர் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் இரட்டை குடியுரிமை பிரிவை நீக்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளமையினைத் தொடர்ந்தே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இரட்டை குடியுரிமை பிரிவிற்கு ஆதரவளிக்காமல் இருப்பதற்கு குறித்த அனைவரும் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
0 comments: