அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச்சட்ட தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் இன்று இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சபாநாயகரால் அறிவிக்கப்படவுள்ளது.
அதேநேரம், அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளையும் நாளை மறுதினமும் நடத்தப்படவுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
குறித்த விவாதத்திற்கு மூன்று நாட்கள் ஒதுக்கப்பட வேண்டும் என எதிர்கட்சிகள் கோரியுள்ள நிலையில், கோரிக்கைக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதை அடுத்து இரண்டு நாட்கள் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, நாளை மற்றும் நாளை மறுதினம் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30 வரை 20 ஆம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
இந்த இரண்டு தினங்களும் நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில்; இடம்பெறும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் இடம்பெறாது என்பதுடன், மதிய போசனத்துக்காக விவாதம் இடைநிறுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசியலமைப்பின் 20 வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை பிற்போடுமாறு கோரி எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் சபாநாயருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்ட சுகாதார நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்பட வேண்டுமானால் கூட்டங்கள் நடத்தப்படுவது மட்டுப்படுத்தப்பட வேண்டும்
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் விதம் அரச சுகாதார சட்டத்திற்கு முரண்பட்டது எனவும் கூட்டங்களுக்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தை கூட்டுவது சட்டத்திற்கு புறம்பானது எனவும் அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments: