நூருல் ஹுதா உமர்.
13 வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நீக்கப் போகிறோம் என்று கூறும் அரசாங்கத்தினது இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன ? மாகாண சபை அதிகாரத்தை தக்க வைப்பதில் சிறுபான்மைக் கட்சிகள் ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதா ? 13 ஆவது சட்டம் நீக்கப்படுமானால் அதற்குரிய பரிகாரம் என்ன ?
இனப்பிரச்சினை தொடர்பில் அடுத்தகட்ட தீர்வுத் திட்டத்தை நோக்கி அரசாங்கம் நகருமா ? இனவாதத்தை அடிப்படையாக வைத்து வங்குறோத்து அரசியல் செய்பவர்கள் அதைக் கைவிட்டு மக்களுக்குத் தேவையான காத்திரமான அரசியலை செய்ய முன்வருவார்களா ? நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட மாகாண சபை திருத்தச்சட்டத்தில் இனப்பிரச்சினை தொடர்பில் ஏதேனும் தீர்வுகள் உள்ளடக்கப்பட்டிருந்ததா ?
முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த காலத்தில் 13+ என கூறி மக்களை ஒருபுறம் திசை திருப்பினாரா ? மாகாண சபை அதிகாரம் எந்த பலனையும் கொடுக்காது என்று மஹா நாயக்கர்கள் தெரிவித்து வருவது ஏன்?
மாகாண சபை அதிகாரம் தேவையற்றது என்றும் அதனை மகா நாயக்கர்கள் நீக்க கோருவதும் ஏன் ? என்ற கேள்விகளுக்கு நாங்கள் விடைதேட வேண்டும் என மாற்றத்திற்கான முன்னணி செயற்பாட்டாளர் சட்டத்தரணி
ஹாதி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துரைத்த அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளை இல்லாமலாக்குவதற்காக ஒட்டுமொத்த ஒன்பது மாகாண சபைகளினதும் நிர்வாகங்கள் சீர்குலைக்கப்பட வேண்டுமென்பதற்காக முன்னாள் நல்லாட்சியின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சகல கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாத திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்திருந்தார்.
நல்லாட்சி என்றும் ஜனநாயக ஆட்சி என்றும் அதனை காப்பாற்ற வேண்டுமென படாதபாடுபட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் நல்லாட்சி அரசாங்கத்தோடு சேர்ந்தியங்கிவிட்டு, சமூகத்துக்கு எதனைப் பெற்றுக் கொடுக்கலாம் என்ற சிந்தனைகளுக்கு அப்பால் வெறுமனே நல்லாட்சியை காப்பாற்றி மாகாண சபை திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்துவிட்டு தடுமாறும் சிறுபான்மைக் கட்சிகள் வாக்களித்த மக்களுக்கு என்ன பதிலை கூற விருக்கின்றது. சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களின் அற்ப ஆசைகளினால் அல்லது தங்களுக்கு கிடைத்த சுகபோகங்களை அனுபவிக்கும் வகையிலேயே மாகாண சபை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தார்கள்.
இது மக்களுக்குச் செய்த துரோகமாகவே கொள்ளப்படவேண்டும். காலத்திற்கு காலம் புதிய பசப்பு வார்த்தைகளை பரப்புரை செய்வதன் மூலம் மக்களை ஏமாற்றி தங்களை ஸ்திரப்படுத்தி பாராளுமன்றத்திலே சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனரே தவிர மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படாமல் இருப்பதை கண்டித்து ஒரு அறிக்கை கூடவெளியிடாமலும் காலம் கடத்தியது வாக்களித்த மக்களுக்கு செய்த பெரும் துரோகவே கொள்ளப்பட வேண்டும். அன்று அவ்வாறு செயற்பட்டதனாலேயே இன்று 13 ஆவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற பேச்சுக்கள் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எப்படியான குணநலன்களைக் கொண்டவர் என்பதை அறியாது அவருடைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்று தங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்களுக்காக ஆதரவளித்ததன் காரணமாகவே இன்று தமிழ் முஸ்லிம் கட்சிகள் சீர்குலைக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறிருப்பினும் தேர்தலில் வெற்றி பெற்ற மறுதினமே மக்களிடம் இருந்து வெருண்டோடும் இவர்கள் ஐந்து வருடங்களுக்கு பின் மனச்சாட்சியற்று அந்த மக்களிடமே மீண்டும் இனவாத விசத்துடன் வந்து வாக்குகளை கொள்ளையடித்து திரும்பவும் தமது உல்லாச வாழ்வுக்கு மீண்டுவிடுகின்ற அவலநிலையை நாங்கள் காண்கிறோம்.
தமிழ் முஸ்லிம் கட்சிகள் தங்களுக்கு வாக்களித்த மக்களின் பிரச்சினைகளுக்குரிய வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுக்க தவறிவிட்டு நல்லாட்சியை காப்பாற்ற முக்கியத்துவம் வழங்கியதனாலேயே இன்று இருக்கின்ற அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு வித்திட்டது.
13 ஆவது திருத்தச் சட்டம் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்டது. இது ஒரு சர்வதேச ஒப்பந்தமாக கொள்ளப்படுவதால் இலங்கை அரசு வெறுமனே அதனை இல்லாது ஒழித்து விட எடுக்கப்படும் முயற்சிகள் எந்த அளவுக்கு சாதகமானதாக அமையும் என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படுகின்ற வேளையில் இந்திய அரசாங்கம் என்ன நடை முறைகளை கையாளும் என்ற கேள்வியும் எழுகின்றது.
மாகாண சபை திருத்தச் சட்டத்தின் மூலம் தொகுதிவாரி பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்படுவதனால் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைவடையும் என்பதையும் தெரிந்து கொண்டும் அத்திருத்தத்திற்கு ஏன் வாக்களித்தார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர்.இந்தச் செயற்பாடு தங்களுக்கு வாக்களித்த மக்களை பெரும்பான்மை சமூகத்துக்கு காட்டிக் கொடுத்துள்ளதுடன் வரலாற்றில் செய்த பெரும் துரோகமுமாக கணிக்க வேண்டியுள்ளது.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் வடக்கு-கிழக்கு இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கொண்டுவரப்பட்டது என்றால் ஏன் மாகாணசபைத் திருத்தச் சட்டத்தினை திருத்துவதற்கு தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணங்கி சென்றது என்ற பலமான கேள்வியும் எழுகின்றது.
தமிழ் முஸ்லிம் கட்சிகள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தங்களது இனத்திற்கான எந்த உரிமையையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.இந் நாட்டின் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகம் அறிவுபூர்வமான அரசியல் சித்தாந்தத்திற்குள் உள்வாங்கப்பட்டு செயற்படுவதன் மூலமாக சிறந்ததோர் எதிர்காலம் உதயமாகும்.
சமூகத்தைக் காட்டிக் கொடுக்காது சரியான வழியில் நடத்தவே விட்டுக்கொடுப்பு களுடன் இனவாதம் பேசாமல் முன்னின்று உழைக்க வேண்டும். உலக வரலாறுகளை எடுத்து நோக்கினால் அந்த நாடுகளில் பெரும்பான்மை மக்களோடு சிறுபான்மை இனங்கள் எதிர்த்து நின்று முட்டி மோதிக்கொண்டு வெற்றி பெற்ற வரலாறு கிடையாது என்றார்.
0 Comments