Home » » சஹ்ரான் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அரச புலனாய்வு பிரிவு குற்ற விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியுள்ளது: விசாரணைகளில் அம்பலம்

சஹ்ரான் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அரச புலனாய்வு பிரிவு குற்ற விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியுள்ளது: விசாரணைகளில் அம்பலம்

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தாக்குதல்களை மேற்கொண்ட சஹ்ரான் உள்ளிட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அரச புலனாய்வு பிரிவு குற்ற விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

தாக்குதல்களுக்கு முன்னர் குறித்த பெயர் விபரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அவர்களை கைது செய்வதற்கு இரகசிய பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையென அரச புலனாய்வு சேவையின் அதிகாரியொருவர் ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றும் இன்றும் அரச புலனாய்வு சேவையின் கிழக்கு மாகாணத்தில் சேவையாற்றிய புலனாய்வு அதிகாரியொருவரே சாட்சியமளித்தார்.

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய 94 நபர்கள் தொடர்பான பெயர் விபரங்களை பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்ரதவிற்கும் 129 நபர்கள் தொடர்பான விபரங்களை குற்ற விசாரணை திணைக்களத்துக்கும் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தது. 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி காத்தான்குடி ஆலியார் சந்தியில் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் மொஹமட் சஹ்ரான், மொஹமட் ரில்வான், ஆமி மொஹிதீன் மற்றும் யூசுப் அன்வர் ஆகியோர் தொடர்பில் கிழக்கு மாகாணத்துக்கான மட்டக்களப்பு பிரிவு விழிப்புடன் செயற்பட்டதாக சாட்சியாளர் ஆணைக்குழுவில் குறிப்பிட்டார்.

சஹ்ரான் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கப்படாவிட்டாலும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஏனைய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பில் உண்மையான தகவல்களை பெற்று கொள்ள முடிந்ததாக அவர் குறிப்பிட்டார். யூசுப் அன்வர் காத்தான்குடி நகரில் ஆடைகளை தைக்கும் நிலையம் ஒன்றை நடத்திச்சென்றதாகவும் அவரை கைது செய்வதற்கு பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் புலனாய்வு பிரிவு அதிகாரி மேலும் தெரிவித்தார்.

சகல தகவல்களும் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரமளவில் அரச புலனாய்வு சேவை இரகசிய பொலிசாருக்கு வழங்கியிருந்தது. மார்ச் மாதம் 7ம் திகதி குழுவொன்று பாசிக்குடாவுக்கு வருகை தந்ததாகவும் சாட்சியாளர் ஆணைக்குழு முன்னிலையில் குறிப்பிட்டார். அங்கு சஹ்ரானின் சகோதரரான ரில்வான் ஹாஷிம் மற்றும் மொஹமட் ஷஹினி ஆகியோர் மறைந்திருந்த இடம் தொடர்பில் தெளிவான தகவல்களை பெற்று கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் ஏப்ரல் 24ம் திகதி தான் உள்ளிட்ட குழுவினர் ஆமி மொஹிதீனை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் வரை எந்தவொரு சந்தேகநபரைம் கைது செய்வதற்கு குற்ற புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுக்கவில்லையென புலனாய்வு அதிகாரி தெரிவித்தார். இந்த தாக்குதல் தொடர்பாக அரச புலனாய்வு பணிப்பாளருக்கு வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பிரிவுகளில் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தாலும் புலனாய்வு தகவல்கள் தொடர்பில் தான் தெளிவுப்படுத்தியிருந்தாலும் குறித்த தகவல்கள் தொடர்பில் நாட்டில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களையும் அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லையென்றும் சாட்சியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |