நூருல் ஹுதா உமர்
அண்மையில் மறைந்த முகம்மது ஹனிபா காதர் இப்றாஹிம் (வயது 76) அவர்கள் இறுதி வரை சந்தோசமடைந்த விடயம் மருதமுனையில் கல்விப் பணிமன்றம் ஒன்றை உருவாக்கிய விடயம் தான். அதனை நினைவுகூர்ந்து மர்ஹும் எம்.எச்.எம்.காதர் இப்றாஹிம் கல்விப்பணிமன்றத்தினை இஸ்தாபிக்க வேண்டும் என கல்முனை மாநகர பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.ரஹீப் அவர்களிடம் விஷேட மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளார். இதுசம்பந்தமாக கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் தெரிவிக்கையில்,
மருதமுனையின் கல்வி வளர்ச்சிக்கும், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கும், மருதமுனையின் கலை, இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கும் தன்னை அர்ப்பணித்த கல்வியலாளரும், ஓய்வு பெற்ற முன்னாள் கல்விப் பணிப்பாளருமான எனது தந்தை முன்னாள் அமைச்சர் மர்ஹும் எ.ஆர்.எம்.மன்சூர் அவர்களின் அரசியல் செயற்பாட்டாளருமாக செயற்பட்ட அண்மையில் மறைந்த முகம்மது ஹனிபா காதர் இப்றாஹிம் (வயது 76) அவர்களை காண்கிறேன்.
அண்மையில் காலமான அவர் 1944ஆம் ஆண்டு மருதமுனையில் பிறந்தார். இவர் மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரியில் கற்று 1964.06.01ஆம் திகதி அவர் கற்ற பாடசாலையிலேயே ஆசிரியரானார். 1977ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகி கொழும்பு பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து கலைப்பட்டதாரியான அவர் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி, காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
பொத்துவில் பிரதேசத்தில் கோட்டக் கல்விப் பணிப்பாளராவும் கடமையாற்றியதுடன் இலங்கை கல்வி நிருவாக சேவைப் பரீட்சையில் சித்தி பெற்று கல்வி நிருவாக சேவை அதிகாரியாக நியமனம் பெற்று கல்முனை கல்வி வலயத்தில் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி 2004ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவற்றுக்கு மேலதிகமாக 1981ஆம் ஆண்டு தொடக்கம்1987ஆம் ஆண்டுவரை கல்முனை வடக்கு கிராம சபையின் விஷேட ஆணையாளராகவும் நியமனம் பெற்று இப்பிரதே மக்களுக்கு சிறந்த சேவையாற்றியுள்ளார்.
இவர் மேலும் மருதமுனையின் கல்வி வளர்ச்சிக்காக கல்விப்பணி மன்றம் ஒன்றை உருவாக்கி மருதமுனையின் கல்வி வளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றியுள்ளார். பயங்கரவாத கால கட்டத்தில் மருதமுனையில் ஆரம்பிக்கப்பட்ட சமாதான சபையுடன் இணைந்து காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளார்.சமூக சேவையில் மிகவும் ஆர்வமுடன் செயற்பட்டுள்ளார்; .மருதமுனையை கல்வியால் முன்னேற்றுவதில் தூரநோக்கு சிந்தனையுடன் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆகவே இவரின் இப்புனித சேவை மற்றும் அவர் இறுதி வரை சந்தோசமடைந்த விடயம் மருதமுனை யில் கல்விப் பணிமன்றம் ஒன்றை உருவாக்கிய விடயம் தான் ஆகவே தான் அதனை நினைவு கூர்ந்து மர்ஹும் எம்.எச்.எம்.காதர் இப்றாஹிம் கல்விப் பணிமன்றத்தினை இஸ்தாபிக்க வேண்டும் என கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ரஹீப் அவர்களிடம் விஷேட மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளேன் என்றார்.
0 Comments