நூருல் ஹுதா உமர்
முஸ்லிங்களின் முகவெற்றிலை என வர்ணிக்கப்படும் கல்முனை மாநகரம் இப்படி சீரழிந்து இருக்க காரணம் என்ன? நகர மத்தியில் ஒரு பொதுக்கழிவறைகூட இல்லாத மாநகரமே கல்முனை என்பதை நினைக்கும் போது மனம் கடுமையாக வேதனையளிக்கிறது. கல்முனையின் தலையெழுத்தை மாற்றும் காலமாக இந்த தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும் என பிரபல உயிரியல் ஆசானும் திகாமடுல்ல மாவட்ட தேசிய காங்கிரசின் வேட்பாளருமான றிசாத் ஷெரீப் கேட்டுக்கொண்டார்.
நேற்று மாலை கல்முனை பிரதேசத்தில் நடைபெற்ற மகளிர் சந்திப்பில் கலந்துகொண்டு பிரதம உரை நிகழ்த்திய அவர். தனது உரையில் மேலும்,
கடந்த பல வருடங்களாக எமது ஊரின் சகோதரர் ஒருவரை பாராளுமன்றம் அனுப்பி அவரூடாக அரசினால் பிரதி அமைச்சினையும், இராஜாங்க அமைச்சினையும் பெற்றோம். ஆனால் அந்த சகோதரர் கடந்த 20 வருடங்களாக இனவாதத்தை விதைத்ததை தவிர இந்த மண்ணுக்கு தன்னுடைய அதிகாரங்களை கொண்டு செய்த சேவைகள் அல்லது உருப்படியான வேலைத்திட்டங்கள் ஒன்று கூட இல்லை என்பது வேதனையான உண்மை.
பண்டைய புராதான நகரம் போன்று பல தசாப்தங்களுக்கு முன்னர் கல்முனையில் சிகரங்களாக இருந்த அரசியல் ஆளுமைகளால் கட்டப்பட்ட கட்டிடங்களே இன்றும் எமது ஊரில் இருக்கிறது. அண்டைய பிரதேசங்களில் உள்ள பிரதேசசபை கட்டிடங்கள் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் இக்காலகட்டத்தில் தான் எமது மாநகர சபை கட்டிடம் பலமாக காற்று வீசினால் இடிந்து வீழ்ந்து விடும் அபாயத்தில் உள்ளது. இறக்காமத்திலுள்ள பிரதேசசபைக்கட்டிடத்தையும் விட மிக மோசமான நிலையிலேயே நம் கல்முனை மாநகர சபைக்கட்டிடம் காணப்படுகின்றது.இந்த நாட்டின் பல பிரதேச மக்களும் வந்துசெல்லும் எமது ஊரின் பொதுச்சந்தையின் தலையெழுத்து எப்போது மாறும். இந்த முக்கிய கட்டிடங்களை கட்டுவதற்காக அமைச்சுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், வெளிநாட்டு அரசுகளும் ஒதுக்கிய ஒதுக்கீடுகளுக்கு என்ன நடந்தது. பல மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு அதற்கான வரைபடங்களும் திட்டங்களும் வெளியாகிய சம்பவங்களை நாம் பத்திரிகைகள் வாயிலாக நன்றாக அறிவோம்.
ஏழு மாடியில் கல்முனை மாநகர சபையின் பிரதான காரியாலயம் அமைய வேண்டும். பொதுச்சந்தை சிறப்பான நவீன சந்தை தொகுதியாக மாற வேண்டும். கல்முனை மாநகரம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என கனவுகாணும் நாங்கள் எங்களை ஒருதடவை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். நாங்கள் மாறாதவரை எந்த ஊரில் எதுவும் மாறப்போவதில்லை. இந்த மாநகரத்தை அழகாக மாற்றியமைக்கும் வல்லமையும் சக்தியும் தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களுக்கு அள்ளாஹ் வழங்கியுள்ளான் என நம்புகிறேன். எனவே அவரை பலப்படுத்தி இந்த மாநகரின் தலையெழுத்தை மாற்றியமைக்க ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு அழைக்கிறேன் என றிஷாத் ஷெரீப் தெரிவித்தார்.
0 Comments