காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரொனோ நோயாளிகளில் பூரண குணமடைந்த 55 பேர் இன்று அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களை வழியனுப்பி வைக்கும் வைபவம் இன்று காலை காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
இதன் போது காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் ஏற்பாட்டில் அவர்களுக்கான பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தண்ணீர் போத்தல்கள் என்பனவும் வழங்கப்பட்டதுடன் சிறுவர்களுக்கான அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் மட்டக்களப்பு கல்லடி 231 படைப்பிரிவின் பிரிகேடியர் பள்ளேக்கும்பர மற்றும் கட்டளை அதிகாரி மேஜர் எஹெலப் பொல காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் உட்பட ,ராணுவ உயரதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு வைத்தியசாலையின் நுழைவாயிலில் தேசியக் கொடிகளை அசைத்து அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இரண்டு பஸ் வண்டிகளில் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டதையடுத்து இது வரை 62 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களில் பூரண சுகமடைந்த கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, பேருவளை, மத்துகம, ஜாஎல போன்ற பகுதிகளைச் சேர்ந்த 55 பேரே இன்று அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏனைய 7 பேருக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தம்மை பராமரித்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினர் பொலிசார் அனைவருக்கும் குணமடைந்தோர் நன்றிகளை தெரிவித்தனர்.
0 comments: