Home » » தேர்தலுக்கு தயாராகிறது அம்பாறை தேர்தல் களம் : நிவாரணம், அறிக்கைகள், படையெடுப்பால் திணறும் மக்கள் !!

தேர்தலுக்கு தயாராகிறது அம்பாறை தேர்தல் களம் : நிவாரணம், அறிக்கைகள், படையெடுப்பால் திணறும் மக்கள் !!



நூருல் ஹுதா உமர் 

எதிர்வரும் மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தலை இலக்கு வைத்து அம்பாறை மாவட்டத்தில் சகல வேட்பாளர்களும் தமது வெற்றிக்கான ஆதரவை திரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.  கோவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் நிலவி வரும் இவ்வேளையில் தேர்தல் நடத்துவது தொடர்பில் அரசாங்கமும், தேர்தல்கள் ஆணைக்குழும் பாரிய சிக்கலை சந்தித்துவருகிறது. 

இவற்றையெல்லாம் ஒரு புறம் வைத்துவிட்டு தனது வெற்றிக்காக உழைக்கவேண்டிய தேவையை முன்னிருத்தி பெரும்பாலும் சகல கட்சி வேட்பாளர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். தொலைபேசி சின்னத்தில் களமிறங்கியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் கோவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய தொகையளவில் நிவாரணம் வழங்குவது, கண்டன அறிக்கைகளை வெளியிடுவதுடன் மட்டுமின்றி ஆதரவாளர்களினதும், பிரதேச முக்கியஸ்தர்களினதும், எதிரணி பிரபலங்களினதும் வீடுகளுக்கே தனியாக நேரடியாக சென்று ஆதரவு திரட்டி வருவதுடன் தமது கட்சியில் மக்கள் செல்வாக்கு கூடிய வேட்பாளரை கடுமையாக திட்டி தீர்க்கும் வேலைகளையும் சில வேட்பாளர்கள் செய்து வருகிறார்கள். 

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் மயில் சின்னத்தில் களமிறங்கியுள்ள வெற்றிபெற வாய்ப்பிருக்கும் முன்னணியில் உள்ள வேட்பாளர்களும் கோவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, கோவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கத்திற்க்கு எதிரான செயற்பாடுகளை செய்வது வருவதுடன் பிரதேச முக்கியஸ்தர்களினதும், எதிரணி பிரபலங்களினதும் வீடுகளுக்கே நேரடியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள் மேலும் ஒதுங்கியிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அரசியல் செயற்பாட்டாளர்கள், மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்கு அழைப்பும் விடுத்து வருகிறார்கள். 

முஸ்லிம் ஜனாஸா எரிப்பு காரணமாக எழுந்துள்ள அதிருப்தி, முஸ்லிம் கட்சிகளின் ஆதிக்கம் போன்ற காரணங்களால்  பொதுஜன பெரமுன சார்பில் மொட்டில் களமிறங்கியுள்ளவர்களின் நிலை பரிதாபமாக அமைந்துள்ளது. ஏனையவர்களை போன்று கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, சமூக வலைத்தளங்களில் அரசுக்கு ஆலோசனை அறிக்கைகளை வெளியிடுவதுடன் மட்டுமின்றி ஆதரவாளர்களினதும், பிரதேச முக்கியஸ்தர்களினதும், எதிரணி பிரபலங்களினதும் வீடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள். ஆனால் மக்களுக்கு நன்று அறிமுகமில்லாத வேட்பாளர்கள் இருவரை மொட்டு தன்னுடைய வேட்பாளர்களாக அறிவித்துள்ளமையால் வீழ்ச்சி தெரிகிறது. ஆனாலும் தன்னுடைய மகனுக்கு ஆதரவு திரட்ட முன்னாள் பிரதியமைச்சரான தந்தை களமிறங்கியுள்ளார். 

முதன்முறையாக குதிரை சின்னத்தில் களமிறங்கியுள்ள தேசிய காங்கிரசின் வேட்பாளர்களும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி  வழங்குவது, அறிக்கைகளை வெளியிடுவது என பாரம்பரிய முறையை கடைபிடித்துள்ளார்கள். மட்டுமின்றி தமது பிரதேச முக்கியஸ்தர்களினதும், எதிரணியினர்களினதும் வீடுகளுக்கு சென்று தமக்கான ஆதரவுகளை  திரட்டி வருகிறார்கள். அக்கரைப்பற்று, சாய்ந்தமருது பிரதேசங்களில் வாக்காளர்களை அதிகமாக கொண்டுள்ளதால் அந்த வாக்காளர்களை தக்கவைக்கும் நடவடிக்கையை வேட்பாளர்களும், முக்கியஸ்தர்களும் இணைந்து முன்னெடுத்து வருகிறார்கள். அரசின் பங்காளிகளாகவே இருந்த போதிலும் அரசின் நடவடிக்கைகள் சிலதை பகிரங்கமாக எதிர்க்கிறார் குதிரை தலைவர். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு, கருணா அணி, யானை அணி போன்றவர்களின் செயற்பாடுகள் இக்காலகட்டத்தில் மந்த கதியில் நடைபெற்று வந்தாலும் அம்பாறை மாவட்ட சிங்கள பிரதேசங்களில் உள்ள சகல கட்சி வேட்பாளர்களும் போட்டிபோட்டு கொண்டு களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள். முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கோரிக்கைளை முன்வைத்து வந்தாலும் வேட்பாளர்கள் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள் என்பது நாடறிந்த விடயம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |