Home » » பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்களுக்காக அரசு வழங்கிய விபரங்கள்

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்களுக்காக அரசு வழங்கிய விபரங்கள்


உலகளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்க சூழ்நிலையால் பிரித்தானியாவில் அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் குடிவரவாளர்கள் மற்றும் அகதி அந்தஸ்து கோருவோர் தொடர்பான விடயங்களிலும் COVID -19 தாக்கத்தினை தொடர்ந்து அகதி மற்றும் குடிவரவு தொடர்பில் பிரித்தானிய உள்நாட்டு திணைக்களம் (Home Office) சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது.
அகதி விண்ணப்பம் அல்லது ஏனைய வதிவிட விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பவர்களுக்கான உள்நாட்டு திணைக்களத்தில் பதிவிடும் (Reporting) தேவைப்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அகதி விண்ணப்பம் தொடர்பான ஆரம்ப தகவல் திரட்டும் நேர்முகத்தேர்வு (Screening Interview) நீக்கப்பட்டு புதிய நடைமுறை தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. அகதி விண்ணப்பம் தொடர்பான விரிவான நேர்முகத்தேர்வு (Full Asylum Interview) தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அகதிகளுக்கான உதவிகள் (NASS Support) இலகுவாக மீளப்பெறவதற்கும் மற்றும் அகதி உதவியின் அடிப்படையில் வீடுகளில் இருப்பவர்களை வீடுகளில் இருந்து வெளியேற நிர்பந்திப்பதையும் எதிர்வரும் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அகதி உதவி தொடர்பான மேன்முறையீடுகளுக்கு மேன்முறையீட்டாளர்கள் நேரடியாக செல்லவேண்டியதில்லை என்பதுடன் தொலைபேசியினூடாக மேன்முறையீட்டு விசாரணை இடம்பெறும்.
அனைத்து சட்ட மேன்முறையீடுகள் (Appeals), மற்றும் சட்ட மீள்பரிசீலனை (Judicial Review) போன்றவற்றிற்கான நேரடி மேன்முறையீட்டு விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 30க்கு பின்னர் தொலைபேசியினூடாக மேன்முறையீட்டு மதிப்பீட்டு விசாரணையினை (Case Management Review Hearing) நடத்தலாம் என்று தற்போதைக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலதிக ஆதாரங்களின் கையளிப்பு (Further Submission) அல்லது புதிய விண்ணப்பம் (Fresh Application) என்பன தற்போது Further Submissions Unit, The Capital Building, Old Hall Street, Liverpool, L3 9PP என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அன்றி CSUCE@homeoffice.gov.uk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்கலாம்.
அரச உதவியுடனான தாமாக விரும்பி சொந்த நாட்டுக்கு திருப்பி செல்ல விரும்புபவர்களை அனுப்பிவைப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
குடிவரவு தடுப்பு முகாம்களில் (Immigration Detention Centres) தடுத்து வைக்கப்பட்டிருந்த 350 க்கு அதிகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் ஏனையோரின் தடுப்புக்களும் மீள்பரிசீலணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
நாடற்றோரின் விண்ணப்பங்களின் பரிசீலனைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மீள்வதிவுரிமை பயணங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 24 முதல் 31 மே வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் நுழைவு அனுமதியினை (Leave) கொண்டிருப்போர் பயணக் கட்டுப்பாடு காரணமாக அல்லது COVID-19 தாக்கத்தினால் தாமாக ஒதுங்கியிருக்கவேண்டிய சூழ்நிலையில் இருப்பின் உடனடியாக CIH@homeoffice.gov.uk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0800 678 1767 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்புகொண்டு உங்கள் முழுப்பெயர், பிறந்த திகதி, சொந்த நாடு, உங்களிடம் உள்ள நுழைவு அனுமதி தொடர்பான விபரம் என்பவற்றுடன் நீங்கள் திரும்பி செல்லமுடியாமைக்கான காரணத்தினையும் உள்நாட்டு அலுவலகத்திற்கு தெரியப்படுத்தவும். அவர்கள் உங்கள் நுழைவு அனுமதி காலாவதியாகும் திகதியினை உங்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.
மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும். Click Here
ஏனைய நீண்ட கால வதிவிட உரிமையினை புதுப்பிப்பதற்காக விண்ணப்பிப்போரும் (Extension Applications for Leave to Remain) ஜனவரி 24 முதல் 31 மே 2020 வரையான காலப்பகுதியில் அவர்களது வதிவிட உரிமை காலாவதியாகும் பட்சத்தில் 31 மே 2020 வரை விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் தேவையான அனைத்து கட்டணங்களையும் செலுத்தி வழமையான நடைமுறையினை பின்பற்றுதல் வேண்டும்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் ஏதும் தேவைப்படின் தமிழ் மொழியில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

Tamil Help Line Number

Desk +442035001573

Mobile - +447525050010

Email : coronatamilhelp@gmail.com



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |