Home » » கொரோனாவுடன் பல இடங்கள் சுற்றித்திரிந்த கடற்படை சிப்பாய்:

கொரோனாவுடன் பல இடங்கள் சுற்றித்திரிந்த கடற்படை சிப்பாய்:

கொரோனா தாக்கத்தினால் வெலிசறை கடற்படை முகாம் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அம் முகாமின் 65 கடற்படையினர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
வெலிசறை முகாமிலிருந்து சிப்பாயொருவர் விடுமுறையில் பொலன்னறுவையிலுள்ள புலஸ்திகவிலுள்ள வீட்டிற்கு சென்றிருந்தபோது, கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டது.
அவர் பொலன்னறுவையிலுள்ள தனது வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் வேறு பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற அச்சம் எழுந்துள்ளது.
அவர் கடந்த 18ஆம் திகதி முகாமிலிருந்து விடுமுறையில் புறப்பட்டுள்ளார். முகாமிலிருந்து விடுமுறைக்கு புறப்பட்ட சக சிப்பாய்களுடன், கடற்படை முகாமிற்கு சொந்தமான வாகனத்தில் கொழும்பிற்கு வந்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுலில் இருந்ததால், பல வாகனங்களில் ஏறி அவர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
கொழும்பிலிருந்து பேருந்தொன்றில் வரக்காப்பொல வரை வந்துள்ளார். பின்னர் முச்சக்கர வண்டியொன்றில் அலவ்வ நகரத்திற்கு சென்றிருந்தார். அலவ்வவிலிருந்து குருநாகலிற்கு இன்னொரு வாகனத்தில் சென்றிருந்தார்.
குருநாகல் சந்தியில் காத்திருந்தபோது, தம்புள்ளைக்கு மரக்கறி வாங்க சிறிய லொறியொன்று வந்துள்ளது. அதை மறித்து, அதன் பின்பக்கத்தில் ஏறியுள்ளார். ஏற்கனவே 4,5 பேர் லொறியின் பின்பகுதியில் இருந்துள்ளனர்.
தம்புள்ளை நகரத்திற்கு வந்து, வாகனங்கள் இல்லாமல் சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தார்.
மின்னேரியா அரசி ஆலைக்கு செல்லும் லொறி ஒன்றில் ஏறி, மின்னேரியா நகரத்திற்கு சென்றார். அங்கிருந்து எந்த வாகனமும் இல்லையென்பதால், ஹிங்குரகொடை வரை கிட்டத்தட்ட 5 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரத்தை நடந்து கடந்துள்ளார்.
பொலன்னறுவை வந்து, புலஸ்திகவிலுள்ள அபயபுரவிலுள்ள தனது வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். அங்கும் சிறிது தூரம் நடந்து சென்றார்.
பொலன்னறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரத் ஜெயசிங்க இதனை தெரிவித்தார்.
இவர் பயணித்ததாக கூறப்படும் லொறி மற்றும் முச்சக்கர வண்டியொன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
லொறி சாரதி மற்றும் உதவியாளர், முச்சக்கர வண்டி சாரதி தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |