Home » » சித்தாண்டியில் தொடரும் மாபியாக்களின் அச்சுறுத்தல்!

சித்தாண்டியில் தொடரும் மாபியாக்களின் அச்சுறுத்தல்!

சந்தனமடு ஆற்றில் நடைபெறும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை தொடர்பில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் மு.முரளிதரனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்றவருக்கு மணல் மாபியாக்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளாதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களின் முறைப்பாட்டுக்கு அமைவாக அது தொடர்பில் பொலிஸ் முறைப்பாட்டினை மேற்கொள்வதற்காக ஆதரங்கள் திரட்டச் சென்ற போது சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடும் குழுவினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இது தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபரிம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தினூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மண் அகழ்வு மேற்கொள்ளப்படக் கூடாது என அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள பிரதேசமாகிய ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப்பகுதியில் நேற்று சட்டவிரோதமாக மண் அகழ்வில் சிலர் ஈடுபடுவதாகப் பிரதேச மக்கள் என்னிடம் முறையிட்டதற்கமைவாக மேற்படி விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அவ்விடம் சென்ற போது அங்கு மண் அகழ்வில் ஈடுபட்டு வந்த ப.லோகநாயகம் மற்றும் வி.பிரசாந்தன் உள்ளிட்ட குழுவினர் என்னை அச்சுறுத்தினர்.
இது தொடர்பில் நான் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டு மேலதிக முறைப்பாடாக பிரதிப் பொலிஸ்மா அதிபரிடமும் முறையிட்டேன். அதனை அறிந்து கொண்ட அவர்கள் நேற்று மாலை எனது வீட்டிற்கு கற்களுடனும், தடிகளுடனும் வந்து எனக்கு உயிரச்சுறுத்தல் விடுத்தனர். இது தொடர்பில் மீண்டும் நான் ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் முறையிட்டதற்கமைவாக ஏறாவூர்ப் பொலிஸாரினால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு எமது மாவட்டத்தின் பிரதான மண் வளத்தைச் சூரையாடுவதற்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு இவர்கள் மூலம் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் கைது செய்யப்படடுள்ள ப.லோகநாயகம் என்பவர் மேலும் ஒரு வழக்கில் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை பெற்றுள்ளவர். இவ்வாறு இருக்கின்ற போதும் இவர்கள் மேலும் மேலும் இவ்வாறான காரியங்களைச் செய்கின்றார்கள் என்றால். இவர்களுக்கு பக்கபலமாக ஏதோவாரு சக்தி இருக்கின்றது என்பதையே காட்டுகின்றது.
இவ்வாறு சட்டவிரோத மண் அகழ்விற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதற்கு தக்க நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |