( வீ.பிரியதர்சன் )
கொரோனா ஆபத்திலிருந்து இலங்கை மீள்வதற்கு எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதிவரை தீர்க்கமான காலமாகும், கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கையின் ஒவ்வொரு தனி நபரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் அவ்வாறு கொரேனாவை கட்டுப்படுத்தினால் நாம் உலகிற்கு முன்னுதாரணமான நாடாக திகழ முடியுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சிறுவர் வைத்தியசாலை கிளையின் செயலாளரும் அதன் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடுசெய்த “ கொவிட் - 19 அறிக்கையிடல் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்ற தொனிப்பொருளில்”  காணொளி மூலமான செயலமர்வொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே வைத்திய வாசன் ரத்தினசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது வைத்தியர் வாசன் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதிவரை மிகவும் தீர்மானமிக்க காலம். ஏனெனில் இலங்கையில் முதலாவது கொரோனா தொற்று நோயாளி அடையாம் காணப்பட்டது மார்ச் மாதம் 11 ஆம் திகதி. ஆகவே அன்றிலிருந்துஇன்றுவரை 16 நாட்கள் ஆகின்றது.
ஒரு கொரேனா தொற்றாளர் குறைந்தது 8 பேருக்காவது நோய்த் தொற்றை பரப்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது அவ்வாறு நோக்குகையில் இலங்கையில் 106 தொற்றாளர்கள் காணப்படுகின்றனர். அவர்களில் பலர் சமூகங்களுக்குள் இருந்துள்ளனர். இதனால் சமூகங்களுக்குள் குறைந்தது 550 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மறைந்தே அல்லது இனங்காணப்படாமலோ உள்ளனர். அவர்களில் இருந்து குறைந்தது 19 ஆயிரம் பேர் பாதிக்கப்படலாம். அவ்வாறானவர்கள் சமூகத்திற்குள்ளும் , தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் இருக்கலாம்.
எனவே தான் இலங்கைக்கு ஏப்ரல் 8 வரையான காலம் மிகவும் தீர்மானம் மிக்க காலமாக உள்ளது.
இந்தநிலையில் அரசாங்கம், சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் நடவடிக்கையைவிட  மக்களின் ஒத்துழைப்பு குறிப்பாக ஒரு தனிநபரின் பங்களிப்பு 100 சதவீதம் அவசியமாக காணப்படுகின்றது. மக்கள் ஒத்துழைத்தால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு பின்னர் சிறந்த ஒரு நிலையை அடையலாம். அதற்காகத்தான் இந்த ஊரடங்குச் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குச் சட்டம் யுத்தகாலத்தில் போட்டப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை விட முற்றிலும் வேறுபட்டது. எனவே மக்கள் அனைவரும் இதற்கு பங்களிப்பு செய்வதற்கு வீடுகளில் இருந்து சுகாதாரத் துறையினரின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்.
இந்த தீர்மானம் மிக்க இக்காலப்பகுதியை நாம் சரியான முறையில் கையாளாவிட்டால் பாதிப்பு எமக்கே. ஆகவே சமூக இடைவெளியை பேணி பாதுகாப்பாக இருப்போம் வீடுகளில் இருப்போம்.
இதேவேளை, கொவிட் - 19 இல் இருந்து வேகமாக மீண்ட நாடு சிங்கப்பூர். அந்நாடு மேற்கொண்ட வழிமுறைகளே நாங்கள் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றி நாம் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் போது உலகிற்கு முன்மாதிரியான நாடாக திகழ முடியும்.
இப்போது சமூக இடைவெளியை பேணினால், ஏனைய நாடுகளைப் போல் ஆபத்தை சந்திக்காமல் தாக்கத்தை தவிர்க்க முடியும். சமூக இடைவெளி நகர்ப்புறங்களில் ஓரளவு கடைப்பிடிக்கப்பட்டாலும், கிராமப்புறங்களில் அதை காண முடியவில்லை. இந்நோயின் தாக்கத்தை உணர்ந்து மக்கள் செயற்படுவது அவசியம். பாதுகாப்பு கவசமின்றி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொவிட் தாக்கத்திற்கு உள்ளானவருக்கு அருகில் செல்ல வேண்டாம்.
முகக்கவசம் அணிபவர்கள், கிருமிநீக்கி முகக்கவசங்களை அணியுங்கள். சாதாரண முகக்கவசங்கள் மற்றும் துணிகள் எவ்வித நன்மையும் அளிக்காது. இதேவேளை,  ஊடகவியலாளர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை அல்ககோல் செறிவு 60 முதல் 70 வீதம் கொண்ட சனிடைசரால் துடையுங்கள். குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் உபகரணங்களையும் அவ்வவாறு துடையுங்கள்.
தேவையேற்பட்டால் மாத்திரம் வெளியில் சென்றுவந்தால் முதலில் கைகளை சவர்க்காரமிட்டு கழுவி, உபகரணங்களை தூய்மைபடுத்தி, நீங்களும் குளித்து, உடைகளை கழுவி சூரிய வெளிச்சத்தில் போடுங்கள். காலநிலை இந்த வைரஸ் தாக்கத்திற்கு பெரும் சாதகத்தையோ பாதகத்தையோ ஏற்படுத்தாது. 60 பாகை வெப்பம் உள்ளபோதே இந்த வைரஸை அழிக்க முடியும்.
குறிப்பாக இந்த நோயை அநேகர் மறைக்கின்றனர். இது மறைப்பதற்கு பாலியல் ரீதியான நோயல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும. இந்நோயினால் உயிரழப்பு ஏற்பட்டால் தகனம் செய்வதே ஆகச் சிறந்த வழிமுறையாகும்.
கொரோனாவின் ஆபத்தான பிடியில் இருந்து நாம் இலங்கையை மீட்டெடுப்பதற்கு அனைத்து மக்களும் ஒவ்வொரு பிரஜையும் உணர்ந்து செயற்பட்டு சமூக இடைவெளிகளை முன்னெடுத்து வீடுகளில் இருந்து பங்களிப்பு செய்வது மிக முக்கியம் எனத் தெரிவித்தார்.