Home » » கல்முனையில் அனைத்து சந்தைகளையும் 03 நாட்களுக்கு மூடத் தீர்மானம்;

கல்முனையில் அனைத்து சந்தைகளையும் 03 நாட்களுக்கு மூடத் தீர்மானம்;

  • கல்முனையில் அனைத்து சந்தைகளையும் 03 நாட்களுக்கு மூடத் தீர்மானம்;
  • திருமணம், பொது நிகழ்வுகளுக்கான மண்டபங்கள் இரத்து;
  • ஐவருக்கு மேல் கூடுவதற்கும் தடை;
  • வெளிநாட்டவர் தங்குவதற்கும் தடை;
  • அறிவுறுத்தல்களை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை.

(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கும் அனைத்து பொதுச் சந்தைகளையும் நாளை வியாழன் (19) தொடக்கம் 03 நாட்களுக்கு தாற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இக்காலப்பகுதியில் சன நெரிசல் ஏற்படாதவாறு விசாலமான பொது வெளிகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வர்த்தகர்களும் பொது மக்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை (18) கல்முனை மாநகர முதல்வர், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிஸ் பொறுப்பதிகாரி, முப்படைகளின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பினரதும் பங்கேற்புடன் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதன்போது மற்றும் பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இது குறித்து கல்முனை மாநகர மேயர்  ஏ.எம்.றகீப் அவர்கள் தெரிவிக்கையில்;
“உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிற நிலையில் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பையும் பொது மக்களின் நலன்களையும் கவனத்தில் கொண்டு, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் 2020/02 சுற்றுநிருபத்திற்கமைவாக கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு, சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வருகின்ற அனைத்து பொதுச் சந்தைகளையும் வியாழன் (19) தொடக்கம் 03 நாட்களுக்கு தாற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மாநகர சபைக்கு சொந்தமானதாக இருந்தாலும் சரி, வணக்கஸ்தலங்களுக்கு சொந்தமானதாக இருந்தாலும் சரி அனைத்து சந்தைகளும் மூடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் சந்தைகளுக்குப் பதிலாக சன நெரிசல் ஏற்படாதவாறு விசாலமான பொது வெளிகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வர்த்தகர்களையும் பொது மக்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பாக கல்முனை மாநகர பொதுச் சந்தைக்குப் பதிலாக சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் அங்கும் இங்குமாக வியாபாரங்களை மேற்கொள்ள முடியும். அவ்வாறே மாநகர சபைக்குட்பட்ட ஏனைய பிரதேசங்களிலும் பொது வெளிகளில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அத்துடன் மறு அறிவித்தல் வரை சினிமா தியேட்டர்களை மூடுவதற்கும் சிறுவர் பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடை செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஒரு இடத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
அதேவேளை, திருமண நிகழ்வுகள் மற்றும் பொது வைபவங்கள் அனைத்தையும் வரவேற்பு மண்டபங்களில் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதுடன் அவசர, அவசியமான திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை முடியுமானவரை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சிலரின் பங்கேற்புடன் தமது வீடுகளில் நடாத்துமாறும் ஆலோசனை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை நடத்துவதற்கு மண்டபங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது என சம்பந்தப்பட்டோர் இத்தால் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அண்மித்த காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்திருப்போர் தம்மை பொலிஸ் நிலையங்களில் அல்லது கிராம சேவகரிடம் சுயமாக தம்மை பதிவு செய்து கொள்வதுடன் அவசியமானோர் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்து கொள்ளாமல் யாராவது மறைந்திருந்தால் பொதுமக்கள் அவர்கள் குறித்த தகவல்களை பொலிஸ் அல்லது கிராம சேவகருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எவராயினும் ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியிருந்தால் அவர்களை உடனடியாக பொலிசாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன் மறு அறிவித்தல் வரை வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் வெளியூர்களை சேர்ந்த நபர்களை ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்க வைப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மேற்படி அறிவுறுத்தல்களை பின்பற்றத்தவறுகின்ற எவராக இருந்தாலும் அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறி, கொரோனா வைரஸ் பரவலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் தகுதி, தராதரம் பாராமல் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
இவற்றை கண்காணிக்கும் செயற்பாடுகளில் மாநகர சபை, பிரதேச செயலகங்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் ஈடுபடுவதுடன் பொலிஸ் மற்றும் முப்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஆகையினால், உலகளவில் பல்லாயிரம் பேரின் உயிரை காவு கொண்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் எமது நாட்டிலும் ஊடுருவியிருப்பதை பொறுப்புடன் கவனத்தில் கொண்டு, இத்தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |