Home » » ரணிலுக்கு கற்பித்த மட்டக்களப்பு ஆசிரியர் அனுபவத்தை பகிர்கின்றார்.88வயதாகியும் இன்னும் ஓய்வூதியம் பெறவில்லை.

ரணிலுக்கு கற்பித்த மட்டக்களப்பு ஆசிரியர் அனுபவத்தை பகிர்கின்றார்.88வயதாகியும் இன்னும் ஓய்வூதியம் பெறவில்லை.

ஒருவர் எவ்வளவு படித்தவராகவும் செல்வாக்கு கொண்டவராகவும் திகழ்ந்தாலும் தனக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களை மறக்க மாட்டார்கள். கண்டால் மரியாதை செலுத்தத் தவறவும் மாற்றார்கள். சில விஷயங்கள் மாற்றம் அடைவதில்லை. ஆசிரியருக்கு கனம் பண்ணுவதும் இவ்வாறே சங்க கால முதல் நம்மிடையே நீடித்து வந்துள்ளது. இதற்கு ஒரு சமீபத்திய உதாரணமும் உண்டு.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சமீபத்தில் கிழக்கு மாகாணம் சென்றிருந்தபோது தனக்கு றோயல் கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியரைக் கண்டு அவரை கௌரவப்படுத்தி வந்திருக்கிறார். அந்த ஆசிரியர் பெயர் சிவலிங்கம் மாஸ்டர். அது பற்றி அவரிடம் பேசுவதற்காக பெரிய கல்லாற்றில் அமைந்துள்ள சிவலிங்கம் ஐயாவின் வீட்டிற்குச் சென்றோம்.பொக்ைக வாய், கபடமற்ற புன்னகை என எம்மை அவர் வரவேற்றார். பின்னர் அவருடன் உடையாடத் தொடங்கினோம். “நான் 1932 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி பிறந்தேன். எனது ஆரம்பக் கல்வியை பெரிய கல்லாற்றிலும், பின்னர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும், பின்னர், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கொலேஜிலும், படித்தேன். எனது சிறிய தந்தை சோமசுந்தரம் றோயல் கல்லூரியில் பகுதித் தலைமை ஆசிரியராக இருந்தார் அவ்வாறு இருந்தும் அப்போது அங்கு சென்று படிக்க முடியவில்லை. ரோயல் கல்லூரியில் ஆரம்ப பாடசாலை 1947 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதில் எனது சிறிய தந்தையார் முதலாவது பகுதித் தலைமை ஆசிரியராக இருந்தார். பின்னர் அதில் படித்துவிட்டு மகரமகயிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்றேன். அதில் பயிற்சி முடித்த பின்னர் எனக்கு முதலாவது நியமனம் கொட்டஹேன மத்திய கல்லூரியில் கிடைத்தது.1956 ஆம் ஆண்டு நியமனம் பெற்றேன். அப்பாடசாலையில 2 வருடங்கள் கற்பித்தேன் பின்னர் றோயல் கல்லூரிக்குச் சென்றேன். அங்கு 14 வருடங்கள் (1959 – 1973 வரை) ஆங்கிலம், வரலாறு, குடியியல், போன்ற பாடங்களைக் கற்பித்தேன். பின்னர் எனக்கு அதிபர் தரம் உயர்வு கிடைத்தது. அங்கிருந்து வனாத்தமுல்ல பாடசாலைக்கு அதிபராகச் சென்றேன். 1992 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். முதன் முதலில் எனக்கு 155 ரூபா சம்பளமும், மேலதிகக் கொடுப்பனவும் கிடைக்கும். அது அந்த நாளில் பெரிய சம்பளமாகும்.” என்று கூறி பொக்கை வாய் புன்னகை சிந்தினார் அவர். ரணில் விக்கிரம சிங்கவுக்கு வகுப்பாசிரியராக இருந்தவர் இவர். அத்துடன் தினேஸ் குணவர்த்தன, சஜித்தா ரத்பத்த, உள்ளிட்ட பல மாணவர்கள் இவரிடம் கற்றவர்கள். இவர்கள் தற்போது இலங்கையிலும், உலக அளவிலும் பிரபலமானவர்களாக உள்ளார்கள் என்பதில் இவருக்கு பெருமை. ”என்னிடம் கற்ற மாணவர்கள் இவ்வாறு பிரபலமானவர்களாக உள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அவர்கள் என்னைவிட தற்போது பெரிய நபர்களாக உள்ளார்கள். அவ்வாறு இருந்தும் அவர்கள் என்னை குரு என்ற ரீதியில் என்னை மதிக்கின்றார்கள் என்பதே எனக்கு மிகப் பெரிய விடையமாக உள்ளது. சஜித்தா ரத்பத்த மட்டக்களப்புக்கு வந்தால் என்னிடம் வந்து உணவருந்தி விட்டுச் செல்வார், அதுபோல் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன என்னை அண்மையில் வந்து கனம் பண்ணிச் சென்றார். ரணில் விக்கிரமசிங்க எனது வீட்டு கேற்றில் காரை நிறுத்தி என்னை அழைத்து சந்தித்துச் சென்றார். மட்டக்களப்பிற்கு ஒரு தடவை ரணில் விக்கிரமசிங்க வந்தபோது என்னை அழைத்து சந்தித்தார். எனது மாணவர்கள் மிகப் பெரிய பதவிகளை வகிக்கின்றார்கள் என்பதையிட்டு மனம் மகிழ்கின்றேன்” என்று கூறுகிறார் சிவலிங்கம் மாஸ்டர்.இவருக்கு மூன்று பிள்ளைகள், மூத்த மகன் ரவிச்சந்திரன் ஜித்தாவில் கணக்காளராக உள்ளார், அடுத்த மகன் அவுஸ்ரேலியாவில் கணக்காளராக வேலை செய்கிறார், மகள் இங்கு வீட்டிலுள்ளார். ”குரு பக்தி என்பதை ஒருசிலர் தான் தற்போதும் மதிக்கின்றார்கள், உதாரணமாக என்னுடைய மாணவர் தினேஸ் என்னை வணங்கிவிட்டுச் சென்றார், ஆனால் நம்மவர்களிடத்தில் அது குறைவடைந்துள்ளது. என்னுடைய மாணவன் தினேஸ்ஸின் அப்பா பிலிப் குணவர்தன பெயர் போன அரசியல் அனுபவம் உடையவர், தினேஸ் படிப்பிலும், வகுப்பிலும், மிகுந்த கெட்டிக்காரன். எவ்வளவுதான் பெரிய இடத்துப் பிள்ளையாக இருந்தாலும் ஆசிரியரை மதிக்கும் செயல் அவர்களிடத்தில் உள்ளது.” என்று அமைச்சர் தினேஷ்குணவர்த்தனவை புகழ்ந்தார்.
இவ்வளவு கீர்த்தி மிக்க பின்புலம் கொண்டிருந்தாலும் ஒரு விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறார். 36 வருடங்கள் அரசாங்க பாடசாலைகளில் ஆசிரிய சேவை புரிந்து பல நல் மாணாக்கர்களை உருவாக்கிய இவர் 1992 ஆம் ஆண்டு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவருக்கு ஓய்வூதியம் பெறுவது எப்படி என்று தெரியவில்லை. இதனால் 28 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் தான் ஓய்வூதியப் பணம் பெறவில்லை என்கிறார் சிவலிங்கம் மாஸ்டர்.எனக்கு இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்கவில்லை, அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தாமாகவே எனக்கு ஓய்வூதியத்தை மாதாந்தம் திணைக்களத்தினர், அனுப்புவார்கள் என நினைத்தேன், அவர்களும், அனுப்பவில்லை, நானும் இதுவரையில் கேட்கவும் இல்லை. நான் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். அதைச் செய்யாதது என்னுடைய தவறுதான்.” என்று அவர் சொல்லும் போது பாவமாக இருக்கிறது. இப்போதும் கூட அவர் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்பது எமது கருத்து.
இனித்தான் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குச் சென்று எவ்வாறு ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பது என்பது தொடர்பில் கேட்க இருக்கின்றேன் என்கிறார். இவர் ஓய்வு பெற்ற பின்னர் அரசியலில் ஈடுபட வருமாறு அழைப்புக்கள் வந்தனவாம். ஆனால் இவர் அதனை விரும்பவில்லை, சமூகப் பணி செய்வதற்கும் தனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று சொல்லும் இவருக்கு இப்போதும் அரசியலில் ஆர்வமில்லை.
“இலங்கையில் ஏற்பட்ட கலவரத்திற்குள் எல்லாம் நான் கொழும்பில்தான் வேலை செய்தேன் ஆனால் எனக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் வரவில்லை. ஏனைய இன மக்களுடன் நாங்களும் நன்றாக பழகவேண்டும், அப்போதான் எவ்வித வேறுபாடுகளும் இன்றி இந்நாட்டில் வாழலாம். அப்போதுதான் தமிழர்களும் நல்லவர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். என்னைப் பொறுத்தவரையில் சிங்கள மக்கள் நல்லவர்கள், அது அவர்களுடன் இணைந்து பழகினால்தான் நன்கு தெரியும்” என்பது அவரது அனுபவப் பதிவு. தற்போது 88 வயதைக் கடந்துள்ள சிவலிங்கம் ஐயாவின் தேங்கிக் கிடக்கும் ஓய்வூதியப் பணம் விரைவில் கிடைக்க வேண்டும், ஐயா நூறாவது பிறந்தநாளைக் காணவேண்டும், அவரது நல்ல மனம் வாழவேண்டும் என்று வாழ்த்தி அவரிடமிருந்து விடை பெற்றோம்.
வ. சக்திவேல் – .பேரின்பராஜா
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |