Advertisement

Responsive Advertisement

பார்த்து எழுத அனுமதிக்காத ஆசிரியர்களை தாக்கிய மாணவர்கள்!


பரீட்சையின் போது தாம் மறைத்து வைத்திருந்த சிறு குறிப்புகள் எழுதப்பட்ட துண்டுகளை பார்த்து எழுதுவதற்கு அனுமதிக்காத பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது, ஆத்திரம் கொண்ட மாணவர்களும், அவர்களுடன் வந்த குழுவினரும் சேர்ந்து நடத்திய தாக்குதலில் காயமடைந்த மேற்பார்வையாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சைகள் கடந்த 25 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.

மொத்தமாக 218 மாணவர்கள் தத்தமது பிரிவுகளுக்கான பரீட்சைகளை எழுதும் நிலையில், அங்கு 12 பரீட்சைக் கண்காணிப்பாளர்கள் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வேறு கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்கள் ஆவர்.

இந்த நிலையில், காலை 9 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, சில மாணவர்கள் மறைத்து வைத்திருந்த சிறுகுறிப்பு துண்டுகளை பரீட்சை மேற்பார்வையாளர்கள் கைப்பற்றியிருந்தனர்.

ஆயினும், பரீட்சை நடந்து கொண்டிருந்த போது மாணவர் ஒருவர் மறைத்து வைத்திருந்த காகிதத் துண்டுகளை வெளியில் வைத்துக் கொண்டு, கேள்விகளுக்கான பதில்களை எழுதிக் கொண்டிருந்தாகவும், தாங்கள் அந்த மாணவர் முறைகேடு செய்வதைக் கண்டுபிடித்ததாகவும் பரீட்சை மேற்பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனை அடுத்து, குறித்த மாணவரை தொடர்ந்தும் பரீட்சை எழுத அனுமதிக்காத மேற்பார்வையாளர்கள், அவரை மண்டபத்திலிருந்து வெளியேற்றினர்.

இதனை அடுத்து, பகல் 12 மணி அளவில் தம்மிடம் வந்து மேற்படி மாணவர் சச்சரவில் ஈடுபட்டதாகவும், பின்னர் அங்கு வந்த சுமார் 30 பேரைக் கொண்ட குழுவினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் கூறினார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பரீட்சை மேற்பார்வையளர் ஒருவரும், உதவி மேற்பார்வையாளர் இருவரும் காயமடைந்த நிலையில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

"எங்கள் மீது அவர்கள் தடிகள் கொண்டு தாக்கினர். நாங்கள் தடுத்த போது, தொடர்ந்தும் அவர்கள் தாக்கினார்கள். அவர்களில் சிலர் தலைக்கவசம் அணிந்து தமது முகத்தை மறைத்திருந்தனர்," என்று, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் உதவி மேற்பார்வையாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தமது திணைக்களத்தின் அனுமதியின்றி தங்களுடைய பெயர் மற்றும் படங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான அதிகாரிகள் இருவரின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் எம்.எம். ஹசன், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், பரீட்சைக் கடமைகயில் ஈடுபடுவதற்கு மேற்பார்வையாளர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும், திங்கட்கிழமை நடைபெறுவதற்கு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள பரீட்சையினை நடத்துவது குறித்து தாம் கலந்தாலோசித்து வருவதாகவும், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் ஹசன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments