Home » » ஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகம் தொடர்பான ஆதாரத்தை அம்பலப்படுத்திய உறுப்பினர்!

ஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகம் தொடர்பான ஆதாரத்தை அம்பலப்படுத்திய உறுப்பினர்!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் சவுதி அரேபிய நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் கையகப்படுத்த வேண்டும் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் முழுமையான அரசியல் அதிகாரகத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ,அதற்கான ஆதாரங்களையும் சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு சவுதி அரேபிய தனியார் பல்கலைக்கழகம் குறித்த நாடாளுமன்ற துணைக்குழு அறிக்கை இன்றைய தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டதோடு அறிக்கை மீதான விவாதமும் இடம்பெற்றது.
இந்த அறிக்கையை சமர்பித்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சட்டவிரோதமாகவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியதுடன், அரசாங்கம் அதனை பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
2013ஆம் ஆண்டு ஜுன் 23ஆம் திகதி இந்த மட்டக்களப்பு சவூதி அரேபிய பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அப்துல்லா அல் ஜபாலி என்கிற அமைப்பிலிருந்து 7 தடவைகள் இந்த பல்கலைக்கழகத்திற்காக 360 கோடி ரூபா பெறப்பட்டிருக்கிறது.
2016ஆம் ஆண்டு மார்ச் மற்றும் 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த நிதிகள் பெறப்பட்டுள்ளன. இந்த செயற்பாட்டினை ஏன் சட்டவிரோம் என்கிறார்கள்? 2012ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதி இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தொழிற்பயிற்சி நிலையம் என்கிற பெயரில் தான் காணி கோரப்பட்டிருந்தது.
மகாவலி அமைச்சிலிருந்து காணி இவ்வாறு வழங்கப்பட்டால் அதனை வர்த்தமானியில் பிரசுரிப்பார்கள். ஆனால் இந்த விடயத்தில் அதுவும் நடக்கவில்லை. சுற்றுச்சூழல் அறிக்கையும் பெறப்படவில்லை. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு 35 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டாலும் மேலதிகமாக 08 ஏக்கர் நிலம் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் இன்னும் 42 ஏக்கரை அவர்கள் கோரியிருக்கின்றனர். தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி ஹிஸ்புல்லா இதனை செய்துள்ளார். கட்டிடத்தை அமைக்க பிரதேச செயலக அனுமதி வழங்கப்படவில்லை. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் போது இதற்காக பெற்ற நிதி கடன் என்பதை ஹிஸ்புல்லா கூறியிருந்த போதிலும் கடன் பற்றிய எந்த ஆவணங்களும் வங்கிக்கு சமர்பிக்கப்படவில்லை.
எனவே முற்றுமுழுதாக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பல்கலைக்கழகத்தை அரசாங்கம் ஏற்கவேண்டும் என்பதோடு இந்த முறைகேடான நிதி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர்கள் சட்டத்திற்கு முன்பாக கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சவுதி அரேபியாவில் இருந்து கிடைத்த பல பில்லியன் ரூபாய் நிதிகளைக் கொண்டு நிர்மாணித்துள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தால் கையகப்படுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று சூளுரைத்துவரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரச்சனைகள் இருப்பின் அரசாங்கத்துடன் இணைந்து குறித்த பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க தான் தயார் என்று கூறி வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |