Home » » மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் மனைவி எங்கே? ஐந்து நாட்களின் பின்...

மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் மனைவி எங்கே? ஐந்து நாட்களின் பின்...

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய நபரின் பெயர் ஆஸாத்.
காத்தான்குடியில் பிறந்தவர். இவர் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொள்ளும் பொருட்டு, சில நாட்களுக்கு முன்னர் காத்தான்குடிக்கு பிபிசி சென்றிருந்த போதும், குறித்த நபரின் தாயாரை சந்திக்க முடியவில்லை.
அவரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றிருந்தார்கள். இந்த நிலையில், கல்முனை - இஸ்லாமாபாத் எனும் பகுதியில்தான், ஆஸாத் திருமணம் முடித்துள்ளார் என்கிற தகவல் கிடைத்தது.
ஆஸாத் பற்றிய தகவல்களை சேகரிக்க இஸ்லாமாபாத் பகுதிக்குச் சென்றோம். நாம் தேடிச் சென்ற வீட்டை கண்டுபிடிப்பதற்கு உள்ளூர்வாசிகள் உதவினார்கள். ஆஸாத்தின் மனைவியினுடைய தாயாரை (மாமியார்) அந்த வீட்டில் சந்தித்தோம்.
ஆஸாத்தின் மாமியாரின் பெயர் சித்தி. அவர் எங்களை பயத்துடனேயே எதிர்கொண்டார். போலீஸாரும் படையினரும் அடிக்கடி வந்து விசாரணை செய்வதால் மனதளவில் தான் நொந்து போயுள்ளதாக அழுதார்.
தற்கொலை குண்டுதாரி ஆஸாத் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக சென்றிருந்த நமக்கு, அங்கு வேறொரு அதிர்ச்சிகரமான தகவலும் காத்திருந்தது.
34 வயதான ஆஸாத் 2012ஆம் ஆண்டு திருமணம் முடித்தார். மனைவியின் பெயர் பைறூஸா. வீடு, சீதனம் எதனையும் பெண் தரப்பிடமிருந்து ஆஸாத் பெற்றிருக்கவில்லை. அவர் சில வருடங்கள் வெளிநாட்டிலும் வேலை புரிந்தார்.
ஆஸாத்தின் மனைவி பைறூஸா, வீட்டுக்கு முதல் பிள்ளை. அவரின் தந்தை 10 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். "சுனாமி அனர்த்தத்தில் இரண்டு பிள்ளைகளை இழந்து விட்டேன். பைறூஸாவுக்கு பிறகு, 13 மற்றும் 12 வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள்" என்றார் பைறூஸாவின் தாயார்.
திருமணம் முடித்த கையோடு மனைவியை அழைத்துக் கொண்டு, தனது சொந்த ஊரான காத்தான்குடிக்கு ஆஸாத் சென்று விட்டார். "அவர்கள் சந்தோசமாகத்தான் வாழ்ந்தார்கள்" என்று கூறினார் ஆஸாத்தின் மாமியார்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் மனைவியுடன் வந்து கல்முனை - இஸ்லாமாபாத்தில் சிறிது காலம் ஆஸாத் வசித்துள்ளார். பின்னர் மீண்டும் காத்தான்குடிக்கே சென்று விட்டார்கள்.
தனது காணியொன்றை விற்று, அதில் கிடைத்த பணத்தில் சிறிய ரக லாறி ஒன்றினை ஆஸாத் கொள்வனவு செய்துள்ளார். அதை வைத்து, பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த வாகனத்தை விற்று விட்டார்.
ஆஸாத் திருமணம் செய்து 10 வருடங்கள் ஆனபோதும் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
"ஆஸாத் நல்ல பிள்ளை, எனது மகளை நன்றாக வைத்திருந்தார். மார்க்கத்தில் (சமயத்தில்) உறுதியானவர்" என்று பிபிசியிடம் பேசிய அவரின் மாமியார் கூறினார்.
"சரி, ஆஸாத்தின் மனைவி பைறூஸா எங்கே?"
கண்ணீர் பொங்க, பைறூஸாவின் தாயார் கூறுகிறார், "சாய்ந்தமருதில் நடந்த குண்டு வெடிப்பில் பைறூஸா இறந்து விட்டார்" என்று. நாம் எதிர்பாராத தகவலாக அது இருந்தது.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது, ஏப்ரல் 21ம் தேதி தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய ஆஸாத் அங்கேயே பலியானார்.
ஏப்ரல் 26ம் தேதி சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் நடந்த தற்கொலைக் குண்டு வெடிப்பில் மூன்று குழந்தைகள், ஆறு பெண்கள் உட்பட 15 பேர் இறந்தார்கள். அவர்களில் ஆஸாத்தின் மனைவி பைறூஸாவும் ஒருவர் என்கிறார் அவரின் தாயார்.
"சாய்ந்தமருது சம்பவம் நடந்தவுடன் போலீஸார் வந்து எங்களை விசாரித்தார்கள். பிறகு என்னை அழைத்துச் சென்று, பெண் சடலம் ஒன்றை அடையாளம் காட்டுமாறு கேட்டார்கள்.
அந்த சடலத்தின் முகம் சிதைந்திருந்தது. ஆனாலும், அது பைறூஸாதான் என்பதை உறுதிப்படுத்தினேன். பைறூஸாவின் மார்பில் இருந்த ஒரு தழும்பு மற்றும் சில அங்க அடையாளங்களை வைத்து, அது பைறூஸாவின் சடலம்தான் என்பதை அடையாளம் காட்டினேன்" என்றார்.
"கடைசியாக உங்களைப் பார்க்க ஆஸாத் மனைவியுடன் கல்முனைக்கு எப்போது வந்தார்"? என்று கேட்டோம்.
"மூன்று மாதங்களுக்கு முன்னர் வந்து போனார்கள்" என்றார் அவர். பைறூஸா பற்றி கேட்டோம்.
"1993ஆம் ஆண்டு பைறூஸா பிறந்தார். சுனாமியால் நாங்கள் கடுமையாக பாதிப்புற்றோம். அப்போது பைறூஸாவுக்கு 11 வயதிருக்கும். அவரை சம்மாந்துறையிலுள்ள பெண்கள் மதரஸா ஒன்றில் சேர்த்தோம். அங்கு ஐந்து வருடங்கள் இருந்தார். அவரின் தந்தை மரணித்தவுடன் மதரஸாவை விட்டு, வீட்டுக்கு வந்து விட்டார்"
"கரப்பான் பூச்சி, பல்லியைக் கண்டாலே எனது மகள் சத்தமிட்டுக் கத்துவார். அப்படியொரு பயந்த குணம் கொண்டவர்" என்று சொல்லி விட்டு அழத் தொடங்கினார் பைறூஸாவின் தாய்.
- BBC - Tamil
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |