Home » » உலகையே உலுக்கிய நியூஸிலாந்து தாக்குதல் -மனதை உருகவைக்கும் மரணங்கள்!

உலகையே உலுக்கிய நியூஸிலாந்து தாக்குதல் -மனதை உருகவைக்கும் மரணங்கள்!

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, நியூசிலாந்தில் கிரைஸ்ட்சேர்ச் நகரத்திலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் பெரும்பான்மையானோர், நியூசிலாந்தின் பாதுகாப்பு, தரம் வாய்ந்த கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை எண்ணி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து, பல்வேறு காரணங்களுக்காக குடிபெயர்ந்தவர்கள்.
"என்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்கு ஒரு மிகச் சிறந்த நாடு கிடைத்துள்ளதாக நான் நினைத்திருந்தேன்," என்று கூறுகிறார் கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலிலிருந்து தப்பித்தவர்களில் ஒருவரான மசாருதீன் சையத் அஹ்மத்.
இந்நிலையில், கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலில் உயிரிழந்த 50 பேரில் சிலரது மனதை உருக்கும் வாழ்க்கை குறிப்புகளை பார்க்கலாம்.
"தப்பி பிழைத்து வந்து மரணித்தனர்"
44 வயதான காலீத் முஸ்தபா மற்றும் 16 வயதான அவரது மகன் இருவரும் சிரியாவின் உள்நாட்டு போரிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள். இவர்களது குடும்பத்தினர் ஏழு பேரும் முதலில் சிரியாவிலிருந்து ஜோர்டானுக்கு சென்ற நிலையில், பின்பு நியூசிலாந்தின் அகதிகள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் கிரைஸ்ட்சேர்ச் நகரத்துக்கு சுமார் ஓராண்டுக்கு முன்னர் வந்தனர்.
ஏனையவர்களை போன்றே நியூசிலாந்தை பாதுகாப்பான நாடாக நினைத்துக்கொண்டிருந்த இவர்கள் இருவரும், கடந்த வெள்ளிக்கிழமை கிரைஸ்ட்சேர்ச் நகரத்திலுள்ள அல்-நூர் மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.
1990ஆம் ஆண்டு சிரியாவிலிருந்து நியூசிலாந்துக்கு குடியேறியவரான அபு அலி என்பவர், காலீத்தின் குடும்பத்தினரை தான் ஒருமுறை சந்தித்துள்ளதாகவும், அவர்கள் நியூசிலாந்தில் இருப்பதை எண்ணி மகிழ்வுடன் வாழ்ந்து வந்ததாக கூறுகிறார்.
"மரணத்திலிருந்து தப்பி பிழைத்த அவர்கள், இங்கு வந்து மரணித்தனர்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
விரைவில் முடிவுக்கு வந்த பொற்காலம்
கிரைஸ்ட்சேர்ச்சின் இருவேறு மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 24 வயதான அன்சி அலிபாவாவின் வாழ்க்கை பயணம் மிகவும் வித்தியாசமானது.
தென்னிந்திய மாநிலமான கேரளாவை சேர்ந்த அன்சி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். சௌதி அரேபியாவில் பணிபுரிந்துகொண்டிருந்த தந்தை உயிரிழக்க, தனது 18 வயதிலேயே குடும்பத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் அன்சி.
தங்களது முதல் சந்திப்பிலேயே அன்சி 'அரவணைப்பு மிக்க குணத்தை" கொண்டிருப்பதை எண்ணி தான் அசந்துபோய்விட்டதாக கூறுகிறார் அவரது கணவர் அப்துல் நசீர்.
வெளிநாட்டில் உயர் கல்வி படிக்க வேண்டும், பல்வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டுமென்ற எண்ணத்தை கொண்ட இவர்கள், கடந்த ஓராண்டுக்கு முன்புதான் நியூசிலாந்துக்கு சென்றனர்.
கிரைஸ்ட்சேர்ச்சிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே, பணிபுரிந்த அன்சியும், அவரது கணவரும் சம்பவ தினத்தன்று அல்-நூர் மசூதிக்கு சென்றனர்.
துப்பாக்கி சத்தம் கேட்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்த அன்சி, அருகிலுள்ள வீட்டுக்குள் வேலியை தாண்டி குதித்தார். அன்சியை தேடிச் சென்ற அப்துல், அவர் தெருவோரத்தில் அசைவற்று கிடைப்பதை கண்டார். அப்போது, மசூதியிலிருந்து வெளியே தப்பித்து வந்த சிலர், அன்சி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததாக அப்துல் கூறுகிறார்.
தன் மனைவியை இழந்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கிறார் அப்துல்.
'என் அன்புக்குரிய கணவரை இழந்துவிட்டேன்'
கடந்த புதன்கிழமையன்று இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவரான மொஹம்மது இம்ரான் கானுக்கு அவருக்கு சொந்தமான உணவகத்தின் முன்பு பலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவை சேர்ந்த இவர், கிரைஸ்ட்சேர்ச் நகரத்தில் லின்வுட் மசூதியில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலில் உயிரிழந்தார்.
"என்னுடைய கணவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, எனக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எண்ணிலடங்காதோர் குறுஞ்செய்தி செய்து வருகின்றனர். இது அவர் எவ்வளவு அன்புக்குரியவராக வாழ்ந்தார் என்பதை காட்டுகிறது" என்று அவரது மனைவி டிரேஸி கூறுகிறார்.
"என்னுடைய கணவரை அனைவரும் நேசித்தார்கள் என்பது தெரியும். ஆனால், அதன் அளவு இவ்வளவு இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று அவர் மேலும் கூறுகிறார்.
தன்னுடைய பதின்ம வயது மகனையும், இருவீட்டாரின் உறவினர்களையும் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதாக டிரேஸி கூறுகிறார்.
'அகதிகளுக்கு உதவ நினைத்தார்'
நியூசிலாந்து தாக்குதலில் உயிரிழந்தவர்களில், அந்நாட்டை சேர்ந்த 64 வயதான லிண்டா ஆம்ஸ்ட்ரோங்கும் ஒருவர்.
"தனது இளமைக்காலத்தில் நியூசிலாந்தின் ஒக்லாந்து நகரத்துக்கு அருகே உள்ள தீவு ஒன்றில், குளியலறை கூட இல்லாத இடத்தில் வாழ்ந்த லிண்டா, பிறகு நகரத்துக்கு குடிபெயர்ந்து மிகப் பெரிய வீடுகளில் வாழ்ந்ததுடன், மோட்டார் சைக்கிளிலேயே பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார். சிறிது காலம் ஜெர்மனியிலும் வாழ்ந்தார்" என்று கூறுகிறார் அவரது மருமகனான கைரோன் கோசி.
எப்போதும் உத்வேகத்துடன் காணப்படும் லிண்டா, 2011ஆம் ஆண்டு இஸ்லாமில் ஆர்வம் கொண்டதுடன், ஒக்லாந்திலுள்ள முஸ்லிம்கள் அகதிகள் முகாம் ஒன்றில் சேவை செய்தார்.
ஒருகட்டத்தில், இஸ்லாம் குறித்து பல்வேறு விடயங்களை தெரிந்துகொண்ட லிண்டா என்னிடம்,"இவர்கள் (இஸ்லாமியர்கள்) மிகவும் அருமையானவர்களாக உள்ளனர். நான் இந்த மதத்துடன் மிகவும் ஒன்றியதை போல உணருகிறேன்" என்று கூறினார்.
"சம்பவ தினத்தன்று மசூதியின் பின்பகுதியில் அமர்ந்திருந்த லிண்டா, துப்பாக்கி சத்தத்தை கேட்டு, கூட்டத்தினருக்கு முன்பு வந்து, சுடப்பட்டு இறந்தார்" என்று அவர் மேலும் கூறினார்.
பலரது உயிரை காப்பாற்றிய மருத்துவர்
கிரைஸ்ட்சேர்ச் நகரத்தை சேர்ந்த பலருக்கும் 57 வயதான இதயநோய் நிபுணரான அம்ஜத் ஹமீதை தெரிந்திருக்கிறது.
"மருத்துவர் அம்ஜத்தை நான் சந்தித்தபோது, என் உடல்நிலையை கருதி பணி ஓய்வு பெறுமாறு வலியுறுத்தினார். என் போன்ற பலரது உயிரை காப்பாற்றிய அவர் இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துவிட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று கூறுகிறார் நியூசிலாந்தை சேர்ந்த பீட்டர் ஹிக்கின்ஸ்.
பல தசாப்த ஆண்டுகளுக்கு முன்னதாக பாலத்தீனத்திலிருந்து நியூசிலாந்தில் குடியேறியவரே மருத்துவர் அம்ஜத் ஹமீது.
கடுமையாக உழைத்த வங்கதேசத்தவர்
கிரைஸ்ட்சேர்ச் நகரத்தில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலை இந்த நகரத்தில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 185 பேர் உயிரிழந்த சம்பவத்தோடு பலர் ஒப்பிடுகின்றனர்.
அந்த நிலநடுக்கத்துக்கு பிறகு, நகரத்தை மீட்டெடுப்பதற்காக பணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவ்வாறு நியூசிலாந்துக்கு வந்தவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த ஜக்கரியா புய்யாவும் ஒருவர். கிரைஸ்ட்சேர்ச்சில் ஒட்டுனராகபணியாற்றிய ஜக்கரியா, சம்பவ தினத்தன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக விடுமுறை எடுத்திருந்தார்.
நண்பர்களுடன் அல்-நூர் மசூதிக்கு சென்ற ஜக்கரியாவுக்கு கிரைஸ்ட்சேர்ச்சில் குடும்பத்தினர் இல்லை என்பதால், அவர் இந்த சம்பவத்தில் இறந்ததை உறுதிப்படுத்துவது சிரமமாக இருந்தது.
நன்றி பிபிசி


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |