தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்தநாளுக்கு வவுனியா வளாகத்தில் கேக் வெட்டியமையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பம்பைமடு விடுதியில் தங்கியுள்ள முதலாம் வருட மாணவர்கள் நேற்று (26.11) பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டியுள்ளனர். தமது விடுதியில் இடம்பெற்ற இந் நிகழ்வை முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்த பின்னர் அதை அவதானித்த சிங்கள மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாடியவர்களுடன் முரண்பட்டுள்ளனர். எனினும் விடுதி மேற்பார்வையாளர் இரு பிரிவினரையும் சமரசம் செய்து வைத்துள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை வவுனியா வளாகத்தின் குருமன்காடு கற்கைகள் பீடத்திலும் இதே சம்பவம் இடம்பெற்ற நிலையில் சிங்கள மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் முரண்பாடு இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
இந் நிலையில் வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள வளாகத்தின் நிர்வாக அலுவலகத்திற்கு இரவு 9 மணியளவில் வருகை தந்த சிங்கள மாணவர்கள் கேக் வெட்டிய மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலை காணப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு வவுனியா பொலிசாரும் வருகை தந்திருந்தனர்.
வவுனியா வளாகத்தில் அண்மைக்காலமாக சிங்கள மாணவர்கள் அதிகமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments