மட்டக்களப்பு - தளவாய் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ் பாடசாலைக்கு சொந்தமான காணி மீளவும் பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் நேற்று மாலை கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கூறுகையில்,
மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று, தளவாய்க்கிராமத்தில் அமைந்துள்ள தமிழ் பாடசாலைக்கு சொந்தமான மைதானம் 1935ஆம் ஆண்டிலிருந்து பாடசாலை மைதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த காணியினை, அண்மித்த சில நாட்களுக்கு முன்பு சகோதர சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்குரியது எனக்கூறி வேலியமைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து காணி அபகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த நான் மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன், இதற்கான தீர்வினை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்திருந்தேன்.
இவ் விடயம் தொடர்பாக நான் சம்மந்தப்பட்டவர்களுடன் 8இற்கு மேற்பட்ட தடவைகள் நேரடியாக சந்தித்துப் பேசியிருந்தேன் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனுக்கும், காணி விடுவிப்பு தொடர்பில் பாடுபட்டவர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.


0 Comments