எனது வீட்டுக்கு சிறிகஜன் வந்தார். நான் வீட்டின் உள்ளே இருந்தேன். மனைவிதான் வெளியே சென்றார். என்னைச் சந்திக்க வேண்டும் என்று சிறிகஜன் கூறினார். நான் வெளியே வந்தேன்.
ஊர்மக்கள் உங்களை அடித்துக் கொல்லப் போகின்றனர். 10 நிமிடத்தில் நான் உங்களைக் காப்பாற்றுகின்றேன். அதற்கு நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார்.
இவ்வாறு சாட்சியமளித்தார் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபரான சுவிஸ்குமார்.
மாணவி கொலை வழக்குத் தொடர்பான சாட்சியப் பதிவுகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தீர்ப்பாயம் முன்பாக நடைபெற்று வருகின்றன.
வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றும், இன்றும் எதிரி தரப்புச் சாட்சியப் பதிவுகள் நடைபெற்றன.
அதில் சாட்சியமளித்த சுவிஸ்குமார் தெரிவித்தாவது-
புங்குடுதீவில் நின்று மே மாதம் 17ஆம் திகதி சிறிகஜன் எனது நண்பருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தார். என்னுடன் கதைக்க வேண்டும் என்று கூறினார். நான் அப்போது புளிங்கூடல் ஆலயம் ஒன்றின் தேர்த் திருவிழாவில் இருந்தேன்.
எனது நண்பர் நான் கோயிலுக்குள் என்று சிறிகஜனுக்குத் கூறினார். நான் வந்தவுடன் தன்னுடன் கதைக்குமாறு நண்பருக்கு அவர் கூறினார். நான் கோயிலால் வந்து திருப்பி அவருக்கு அழைப்பெடுத்தேன். அவர் என்னைச் சந்திக்க வேண்டும் என்று கூறினார்.
நான் அவரைச் சகோதரர்களுடன் சந்திக்கச் சென்றேன். அங்கு வைத்து சகோதரர் உட்பட 4 பேரைக் கைது செய்தனர். நான் ஏன் கைது செய்கிறீர்கள் என்று கேட்டேன்.
கைதுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சிறிகஜன் கூறினார். வேறொரு தேவைக்காக உங்களைச் சந்திக்கவே தான் வந்தார் என்று சிறிகஜன் கூறினார்.
மறுநாள் காலை சிறிகஜன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குள் வந்தார். நான் வீட்டுக்குள் இருந்தேன். மனைவி தான் வெளியே சென்று அவருடன் பேசினார். அவர் என்னைச் சந்திக்க வேண்டும் என்றார்.
நான் வீட்டுக்கு வெளியே வந்தேன். ஊர்மக்கள் உங்களை அடித்துக் கொல்லப் போகின்றார்கள். உங்களைப் 10 நிமிடத்தில் என்னால் காப்பாற்ற முடியும். அதற்கு நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று சிறிகஜன் கூறினார்.
நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். தமது வாகனம் வருகின்றது என்றும், தன்னுடன் வருமாறும் கூறினார். அதன்படி வாகனத்தில் ஏற்றி என்னை யாழ்ப்பாணம் கொண்டு வந்தார்.
நான், மனைவி, மனைவியின் தாய் மூவரும் வந்தோம். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மு.ப. 11 மணியளவில் எங்களை விட்டார். அதன்பின்னர் பி.ப. 5 மணியளவில் அவர் வந்தார். நான் அவரிடம் நாங்கள் காலையில் இருந்து சாப்பிடவில்லை என்று கூறினேன்.
நான் மறந்து விட்டேன் என்று கூறிய அவர், மனைவியின் தாய்க்கு கண்ணுக்கு அருகே காயம் ஒன்று இருந்தது. அதற்கு முறைப்பாட்டை பதிவு செய்து விட்டு நீங்கள் போகலாம் என்று கூறினார்.
நான் முறைப்பாட்டைப் பதிவு செய்தேன். மருத்துவனையில் சேர்வதற்கான துண்டு ஒன்றையும் தந்து என்னை வெளியே விட்டார்.
அதற்கிடையில், எங்கள் படங்களை முகநூல், இணையத்தளங்களில் வெளியிட்டு விட்டார்கள். நான் அச்சத்தால் யாழ். போதனா வைத்தியசாலைக்குப் போகவில்லை. பஸ் ஏறி நான் கொழும்புக்குச் சென்றேன். என்றார் சுவிஸ்குமார்.
0 Comments