கம்பளையில் வைத்து கடத்திச்செல்லப்பட்ட 2 வயது குழந்தை மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தல் சம்பவம் தொடர்பில் பல விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த குழந்தை இன்று (சனிக்கிழமை) மீட்கப்பட்டதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த குழந்தையும், குழந்தையின் உறவினரான இளைஞரொருவரும் கடந்த புதன்கிழமை கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இளைஞனின் தொலைபேசியூடாக குழந்தையின் தந்தைக்கு தொடர்பு ஏற்படுத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டுள்ளது.
ஆனால், மாலையில் மீண்டும் தொடர்புகொள்வதாக தெரிவித்த குறித்த கப்பம் கோரிய நபர் மீண்டும் தொடர்புகொள்ளாத நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிட மறுத்துள்ளனர்.
0 comments: