கல்குடாவில் அமைக்கப்பட்டுவரும் எத்தனோல் உற்பத்திசாலை அமைப்பதினை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்புவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் உட்பட மூன்று பேர் ஆதரவளிக்கவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.இன்று மட்டக்களப்பு பார்வீதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஐக்கிய தேசிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பாரிய துரோகங்களை இழைத்துவருகின்றது.மட்டக்களப்பில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவற்றினை திறந்து மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தாமல் மதுபான உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கே அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டே வந்திருக்கின்றனர்.1965ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்துவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டது.
இதேபோன்று தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர்.அதன்கீழ் இன்றும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படும் நிலையுருவாகியுள்ளது.
கல்குடாவில் எந்த அனுமதியும்பெறப்படாமல் அரசாங்கம் நாங்கள்தான் என்ற வகையில் செயற்பட்டுள்ளார்கள்.சட்டங்களை அமுல்படுத்துவது அரசாங்கம்.அந்த அரசாங்கமே சட்டதிட்டங்களை மீறிச்செயற்படுவது கவலைக்குரிய விடயமாகும்.
இது தொடர்பில் கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் குறித்த மதுபான உற்பத்தி நிலையத்தின் பணிகளை நிறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்குடாவில் அமைக்கப்படும் எத்தனோல் எனப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு ஐக்கிய தேசிய கட்சி நூறுவீதம் வரிச்சலுகையளித்துள்ளதுடன் வரியின்றிய பொருட்கொள்வனவுக்க அனுமதி வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் குறித்த மதுபான உற்பத்தி சாலையை அமைப்பு பணிகளை நிறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதற்கு அமைவாகவே நான் குறித்த மதுபான உற்பத்தி சாலையினை அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்புவதற்க மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் கையெழுத்துப்பெறும் நடவடிக்கையினை மேற்கொண்டேன்.
கல்குடாவில் உள்ள மதுபான உற்பத்தி சாலை மூலம் பாதகம் இல்லையெனவும் அது தொடர்பில் ஆராயவேண்டும் எனவும் கூறி கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கையெழுத்துவிட மறுத்துவிட்டார்.அதுதேபோன்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இருவரும் கையெழுத்துவிட மறுத்துவிட்டனர்.
எனினும் மட்டக்களப்பு மாவட்ட மூன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளோம்.அதேபோன்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் கையெழுத்திட்டுள்ளனர்.அவற்றினை நான் ஜனாதிபதிக்கு அனுப்புவேன்.
இது தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்களிடமமும் கலந்துரையாடவுள்ளேன் என்றார்.
0 comments: