Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அரசியல் என்பது தமிழ் மக்களின் உரிமையினைப் பெற்றுக் கொள்ளுமாக போராட்டமாக இருக்கவேண்டும்!

வடகிழக்கில் கொல்லப்பட்ட தலைவர்கள் இருந்திருந்தால் இந்த நாட்டில் இடம்பெற்ற தமிழ் மக்களின் அழிவுகள் தடுக்கப்பட்டு வடகிழக்கு பிரதேசம் சிங்கப்பூராக மாற்றப்பட்டிருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழீழ விடுதலைப்போராட்டம் பரிநாமம் அடைந்திருந்த 1984ஆம் ஆண்டிலிருந்து 1987ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது.இந்த காலப்பகுதியில் ரெலோவின் தலைவரை தவிர எந்த இயக்கத்தின் தலைவர்களும் படுகொலைசெய்யப்படவில்லை.
மிதவாத கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் உயிருடன் இருந்தார்கள்.1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்ததை தமிழீழ விடுதலைப்புலிகள் புறக்கணித்து இந்திய இராணுவத்துடன் தேவையற்ற போரை மேற்கொண்டனர்.அதன் காரணமாக 30வருடத்திற்கு பின்னர் இங்கு என்ன நடந்துள்ளது என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.
இதன்போது அனைத்து இயக்கத்தலைவர்களையும் நாங்கள் இழந்துள்ளோம்.ஆயிரக்கணக்கான போராளிகளை இழந்துள்ளோம்.இலட்சக்கணக்கான பொதுமக்களை இழந்துள்ளோம்.கோடிக்கனக்கான சொத்துகளை இழந்துள்ளோம்.மிதவாத அரசியல் தலைவர்களான அமிர்தலிங்கம் மட்டக்களப்பில் சாம்தம்பிமுத்து அவரின் மனைவி உட்பட பலரை இழந்துள்ளோம்.
1987ஆம் ஆண்டு செயற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் வடகிழக்கு இணைக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்ட மாகாணசபையில் இன்று வடகிழக்கு பிரிக்கப்பட்ட நிலையில் எதுவித அதிகாரமும் அற்ற நிலையில் நாங்கள் உள்ளோம்.கிழக்கு மாகாணசபையில் இன்று தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகள் என்ற நிலையில் இல்லாமல் மூன்றாம் தர பிரஜைகள் என்ற நிலைக்கு செல்லக்கூடிய நிலையில் இருக்கின்றோம்.
கடந்த கால நிலையே இதற்கு காரணம் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.கடந்த காலத்தில் இருந்து புதிய பாடங்களை நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.எமது கொல்லப்பட்ட தலைவர்கள் இருந்திருந்தால் இந்த நாட்டில் இடம்பெற்ற தமிழ் மக்களின் அழிவுகள் தடுக்கப்பட்டு வடகிழக்கு பிரதேசம் சிங்கப்பூராக மாற்றப்பட்டிருக்கும்.
இன்று நாங்கள் தியாகிகள் தினத்தினை நடாத்திக்கொண்டுள்ளோம்.இதற்கும் பல விமர்சனங்கள் கூறப்படலாம்.ரெலோவும் ஈ.பி.ஆர்.எல்.எப்.இம் இணைந்து இந்த நிகழ்வினை நடாத்துகின்றது என்ற விமர்சனம் வரலாம்.எனினும் அது தொடர்பில் நாங்கள் அச்சம்கொள்ளப்போவதில்லை.
உயிரிழந்தவர்கள் போராளிகள்.படிக்கவேண்டிய காலத்தில் புத்தக பைகளை தூக்கிவிசிவிட்டு தங்களது உயிரை துச்சமாக மதித்து துப்பாக்கியை ஏந்தியவர்களே இங்கு நினைவுகூரப்படுகின்றனர். இதனை ஒருசிலரே கூடி நினைவுகூருகின்றனர்.
கடந்த காலத்தில் விடுதலைப்போராட்டம் தொடர்பில் எந்தவகையிலும் அறிந்திராதவர்கள்,விடுதலைக்காற்றினைக்கூட தொடாதவர்களே வடகிழக்கில் அரசியலை மேற்கொள்பவர்களாக உள்ளனர்.எமது மக்களுக்காக எந்த தியாகத்தினையும் செய்யாதவர்களே இன்று போராட்டங்களை குறை கூறுகின்றனர்.
கடந்த காலத்தில் இயக்கங்களுக்குள் சகோதர யுத்தம் நடைபெற்றது.ஆயிரக்கணக்கான தலைவர்களையும் பொதுமக்களையும் நாங்கள் இழந்துநிற்கின்றோம்.இந்த இழப்புகளுக்கு பின்பும் நாங்கள் தனித்தனியாக செயற்படப்போகின்றோமா?தமிழ் மக்களின் விடிவுக்காக எமது மக்களுக்கு கிடைக்கப்போகும் சுயாட்சிக்காக ஒன்றுபட்டு செயற்படப்போகின்றோமா என்பதை தீர்மானிக்கவேண்டும்.
1984ஆம் ஆண்டு தமிழ் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டு அதன் பின்னர் இடம்பெற்ற சகோதர யுத்ததிற்கு பின்னர் 2001ஆம் ஆண்டு சகல இயக்கங்களும் மிதவாத கட்சிகளும் தங்களுக்குள் இருந்த முரண்பாடுகளை மறந்து கடந்த காலத்தில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை மறந்து ஒன்றுபட்டுபோராட உருவாக்கப்பட்டதே தமிழ் தேசிய கூட்டமைப்பாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் கூட கடந்த கால சம்பவங்களை மறந்து ஒன்று சேர்வோம் என்று கூறினார்.ஆனால் இன்று அந்த ஒற்றுமை இன்று இல்லாத நிலையே இருந்துவருகின்றது.விடுதலைப்புலிகளின் மௌனத்திற்கு பின்னர் இன்று எமக்குள் ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமை நிலையாக இருக்கும் நிலையில் இல்லாமல்சென்றுவிட்டது.
அரசியல் என்பது நாங்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் சேவையினை விட அவர்களின் உரிமையினைப்பெற்றுக்கொடுக்கும் போராட்டமாக இருக்கவேண்டும்.அது ஏமாற்று அரசியலாக இருக்ககூடாது.

Post a Comment

0 Comments