200 வருடங்கள் வெள்ளையர்களின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட லயன் வீடுகள் இன்று ஆபத்தை எதிர்நோக்கி வருகின்றது.
இக்குடியிருப்பில் வாழும் மக்கள் ஒவ்வொரு நாளும் தன்னுடைய உயிரினை கையில் பிடித்துக்கொண்டும் தனது கஷ்டத்தின் மத்தியிலும் சிறிது சிறிதாக சேமித்து வாங்கிய சொத்துக்களும் இன்று பறிப்போகும் என்ற அச்சத்தில் குடியிருப்பில் வாழ்ந்து வருவதை காண முடிகிறது.
நாட்டில் இந்திய வீடமைப்பு இலங்கை அரசாங்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் இதேவேளை மலையக பகுதிகளில் நாள்தோறும் வீடுகள் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
எப்போது இம்மக்கள் வாழும் குடியிருப்புகள் முழுமையாக மாற்றமடையப்போகின்றதோ என்ற நிலைமை தற்போது தோன்றியுள்ளது.
அந்தவகையில் மலையகத்தில் எத்தனையோ தோட்டங்களில் மண்சரிவு அபாயத்தினால் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். நானுஓயா டெஸ்போட் கீழ் பிரிவு தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் 18 வீடுகளை கொண்ட லயன் பகுதிகளில் வாழும் 80 பேர் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். 50 வருடங்களாக கூரை தகரம் மாற்றப்படாத நிலையில் உள்ளது.
மழைக்காலங்களில் கூரையின் வழியாக மழை நீர் வடிவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இக்குடியிருப்பு பகுதியில் உள்ள லயன் தொகுதியில் உள்ள தகரங்களை மாற்றுவதற்கு அமைச்சர் ஒருவரினால் தகரங்கள் வழங்கியிருந்தாலும், இதுவரை தோட்ட நிர்வாகம் அந்த தகரங்களை மாற்றிக்கொடுக்கவில்லையென இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இக்குடியிருப்புக்கு செல்லும் பிரதான வீதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
மேலும் வீடுகளில் உட்பகுதியில் வெடிப்புற்று காணப்படுகின்றதோடு மலசலகூடங்களும் உடைந்து சரிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.
புதிய வீடுகள் கட்டுவதற்காக 9 வீடுகள் மாத்திரம் நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட போதிலும் எஞ்சிய 9 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை என இம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகள் கடன் அடிப்படையில் நிர்மாணிக்கப்படுவதால் 9 வீடுகளை சேர்ந்தவர்கள் தோட்டத்தில் தொழில் செய்யாத காரணத்தினால் இவர்களுக்கு எந்த அடிப்படையில் கடனை அறவிடுவது எனவும், இதனால் இவர்களுக்கு வீடுகள் நிர்மாணிப்பதில் பல பிரச்சினைகள் இருப்பதாக மேலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை இக்குடியிருப்பில் உள்ளவர்கள் ஏற்கனவே தோட்டத்தில் தொழில் செய்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் வருமானம் இன்றி தவிக்கும் இந்த காலகட்டத்தில் கடனை எவ்வாறு செலுத்துவது, அத்தோடு மண்சரிவினால் பாதிக்கப்படவுள்ள இவர்களை பாதுகாக்க வேண்டியதை தவிர இவர்களுக்கு வீடமைத்து கொடுக்காமல் இருப்பது கவலையளிப்பதாக இம்மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
0 Comments