இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளின் தரப்படுத்தலின் முதலிடத்தை, இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இந்தியாவுக்கெதிராக நேற்றிரவு இடம்பெற்ற இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் வெற்றிபெற்றே, முதலிடத்தை இலங்கை கைப்பற்றியது.
இந்திய அணி முதலிடத்திலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டாமிடத்திலும் இலங்கை அணி மூன்றாமிடத்திலும் காணப்பட்ட நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர், ஆரம்பித்தது.
வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாகக் காணப்பட்ட பூனே ஆடுகளத்தில், இந்தியத் துடுப்பாட்ட வீரர்களை மிரட்டிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், இலங்கைக்கான முதலிடத்தைப் பெற்றுக் கொடுத்தனர்.
முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி, முதலாவது ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்ததோடு, 8 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களுடன் தடுமாறியது. பின்னர், 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் இரவிச்சந்திரன் அஷ்வின் ஆட்டமிழக்காமல் 31 (25), சுரேஷ் ரெய்னா 20 (20), யுவ்ராஜ் சிங் 10 (14) ஆகியோர் மாத்திரமே இரட்டைப்படை ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அறிமுக வீரர் கசுன் ரஜித்த, சகலதுறை வீரர் தசுன் ஷானக இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
102 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றது. இந்தியாவைப் போன்றே முதலாவது ஓவரில் விக்கெட்டை இழந்த இலங்கை, 2 விக்கெட்டுகளை இழந்து 23 ஓட்டங்களுடன் தடுமாறிய போதிலும், அணித்தலைவர் சந்திமாலின் பொறுப்பான ஆட்டத்தால், வெற்றிபெற முடிந்தது. துடுப்பாட்டத்தில் டினேஷ் சந்திமால் 35 (35), சாமர கப்புகெதர 25 (26), மிலிந்த சிரிவர்தன ஆட்டமிழக்காமல் 21 (14) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஆஷிஷ் நெஹ்ரா, இரவிச்சந்திரன் அஷ்வின் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, கசுன் ரஜித்த தெரிவானார்.
இந்த வெற்றியுடன் பெறப்பட்ட முதலிடத்தைத் தக்க வைப்பதற்கு, இந்தியாவுக்கெதிரான தொடரை வெல்ல வேண்டிய தேவை இலங்கைக்கு காணப்படுகிறது. அதற்காக, அடுத்த 2 போட்டிகளில் ஒன்றை வெற்றி கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை வெற்றிபெறுமாயின், தற்போது 3ஆம் இடத்தில் காணப்படும் இந்திய அணி, 7ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்படும். மாறாக, அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை தோல்வியடையுமாயின், இந்திய அணி முதலிடத்திலும், இலங்கை அணி 5ஆவது இடத்திலும் தரப்படுத்தப்படும்
0 Comments